ஈழத்து ஆவி

என்ன எழுதி
என்ன செய்ய...?
ஐந்தாண்டு
கழிந்துவிட்டது
கிழிக்கப்பட்ட
தமிழ் சதைகளில்
தெறித்தோடிய
இரத்தத்துளிகளின்
படிமங்கள் எமை பார்த்து
பரிகாசம் செய்கிறது...!

-----------------------------------
-------------------------------------

ஊற்றிக்கொடுப்பாள்
அந்த ஈழத்தாய்
போதையில் நீ ஆடு..!

காட்டிக்கொடுப்பான்
அந்த தமிழினத்தலைவன்
பரதேசியாய் பல்லிளித்து ஆடு..!

கூட்டிக்கொடுக்க
சிங்கள மாமன்
எவனாவது வருவான்...
அவனிடமும்
விரித்துவிடு
தமிழ் முந்தானைகளை.......!!

வருடம் 2009
மே 16, 17, 18,19,20
எமது உடல்கள்
சிங்களவனின்
வானூர்தி
வெடிக்குண்டுகளிலும்
கன்னிவெடிகளிலும்
கிழிக்கப்பட்டபோது
நீ என்ன
கிழித்தாய் உலகத் தமிழா..
எமக்காக................?


இன்னுமா நீ
மானம் ரோஷமில்லாமல்
வாழ்கிறாய்..!

அடச்சீ..................!

சரி சரி...!

உன் வேட்டியும்
உன் சேலையுமா
அவிழ்க்கப்பட்டது?
உன் கர்ப்பப்பையிலிருந்தா
சிசுக்கழிவு வெடித்து தொங்கியது?
உன் மார்பகங்களா
பிதுங்கி அவமானப்பட்டது ?
உன் நெஞ்சிலா
துப்பாக்கி தோட்டாக்கள்
துரோக ஓட்டையிட்டது...?


நான் என்ன
உன் சொந்தமா...?
நான் என்ன
உன் தொப்புள்கொடியின் மிச்சமா?
உனக்கு ஏன் வலிக்கவேண்டும்..?
உனக்கு ஏன் இரத்தம் கொதிக்க வேண்டும்..?

மாண்டது நான்.. நீ
மானாட மயிலாட என்றே ஆடு...!

நல்லா இரு..! தமிழா! நல்லா இரு...!

மனச்சாட்சி, மனிதாபிமானம்
இன்னும் விற்பனைக்கு இருக்கிறதா
தமிழா உமது உலகத்தில்....?


------------------------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (18-May-14, 10:46 am)
பார்வை : 152

மேலே