ஊட்டியின் மறுபக்கம்

(இது ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் ஊட்டி ஏரியை கண்ணீரால் நிரப்பிய அற்பதமான வாழ்வியல் கவிதை. உங்களை உருக்கும்.கடந்த 42 ஆண்டுகளில் வெளியான இயற்கை சார்ந்த தேர்ந்தெடுத்த சில கவிதைகளின் தொகுப்பான எமது 'இவர்களால் சிலிர்ககும் இயற்கை' நூலில் இது இடம்பெற்றிருக்கிறது. ஜூலையில் வெளிவரும்.
தமிழின மலர்ச்சிக்கான பிரார்த்தனையாக இதைப் பகிர்கிறேன். எல்லோரின் கருத்தும் இக்கவிதைக்கு அமரத்துவம் அளிக்கும். நம் தவங்கள் அந்தக் கண்ணீர் வாழ்க்கைகளுக்கு வரங்கள் ஈட்டும்)
***************** ****************** *************** ** ******88*******

பள்ளத்தாக்கில் நீட்டி நிமிர்ந்து
ஊட்டி ஏரி
அமைதியாய்க் கிடக்கும்.

நீர் தொட்டுயரும் மலைச் சாரல்களில்
புல் விரிப்பில்
நிழல் கோடு கிழித்து
ஏரியின் நீருள்
சிரசாசனம் செய்யும் கற்பூர மரங்கள்
உயரும்.

சில நாட்களின் பின் மீண்டும் தோன்றிய
பகலவனை வருக என்போம்.

படகுகள் தோறும்
புல் வெளி எங்கணும்
வீதிகள் இடத்தும்
மானிடத் தோப்பின் மலர்களும் அரும்புமாய்
வண்ண வண்ணப் பெண்கள்
குழந்தை மொட்டுகள்.

என் வயதையும் நிலையையும்
பொருட்படுத்தாது
சுட்டிப்பயலாய் சுதந்திரமாகும்
தேனீக் கண்கள்.

சுள்ளென உறைக்கும்
வெயிலும்
சில்லிடும் வாடையும்
கண்ணா மூச்சி ஆடும் சுவாத்தியம்.

குதிரைச் சவாரி முடித்து
உலகின் பசிய இயற்கையின்
பிரதி நிதிகள் கூடிய அரங்குபோல்
எழிலார்
தாவர இயல் பூங்கா பார்த்து
திரும்பி வருகையில்,
கண்டேன் ஊட்டியின் மறுபுறம்.

இலைகளை அள்ளிமுடித்து
கொண்டை போட்ட
முட்டைக் கோசுத் தோட்டத்தில் இறங்கி
ஊட்டியின் மறுபுறம் கண்டவர் எத்தனைபேர்?

உருளைக்கிழங்குத் தோட்ட நிலத்தில்
முள்ளால் மண்ணை
குத்திப் புரட்டும் உழைப்பவர் நடுவில்
இலங்கையின் மலைகளில் இருந்து
உதைத்தெறியப் பட்ட சிலருடன் பேசினேன்.

நண்பரே நமது காலம் விடிகையில்
இலங்கை மலைகளின்
ஓரடிப் பாதைகள்
மீண்டும் உமக்குத் திறந்து கிடக்கும்.
என்கிற பேச்சு
அர்த்தமற்றதா?

மானிட வாழ்வின் இயங்கும் திசைகளின்
தொலை தூரத்து இலக்குகள்
தொலைவில் இருப்பினும் எட்டாப் பொருளோ?

இயங்கும் மக்களின்
வரலாற்றின் ஓட்டத்தை
இன்றைய இடத்தில் தேக்கிட முனைபவர்
அர்த்தமற்ற பேச்சென உரைப்பர்.

மஞ்சள் பூசி
பன்றிமுள் செடிகளும்
வாடா மல்லியும்
பூஞ்சிரிப் புதிர்க்கும்
ஊட்டியின் வீதிகளூடு.

உயர்ந்த செங்கொடிகளை மீறி உயர்ந்த
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின்
மேதினச் சங்கற்பங்கள் யாவும்
அர்த்தமற்றவையா?

மக்களின் மேம்பாடும் அபிலாசைகளை
அர்த்தப்படுத்தப் போராடுகின்ற
உலக அணியில்
நானொரு கவிஞன

அளவுற வெட்டித் தைத்த
பசிய தேயிலைச் சட்டை போட்ட
மலைகளை விழுங்கும் பனிமூட்டத்துள்
பசுந்தளிர் பறிக்கும்
செந்தளிர் விரல்களின்
பெண்ணை நான் கேட்கிறேன்
அர்த்தமற்றதா என்னுடைய பேச்சு?

கொழுந்துக் கூடையும்
துயரும் சுமக்கும்
பெண்களின் குறும்பு விழிகளில்
சுடரும்
தொலைதூரத்து விடிவெள்ளிகளைத்
தெளிவாய்ப் பார்க்கிறேன்.
அர்த்தமற்றதோ என்னுடைய பார்வை?

மனோரம்மியமாய் இயற்கை தேவதை
சூரியக் குறிப்பில் திறந்து கிடக்கும்
குறிஞ்சி மண்ணில்
பள்ளத்தாக்கில் நீட்டி நிமிர்ந்து
அமைதியாய்க் கிடக்கும்
ஊட்டியின் ஏரி. (1985)

எழுதியவர் : ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் (18-May-14, 3:01 pm)
சேர்த்தது : கவித்தாசபாபதி
பார்வை : 82

மேலே