===+++காதல் எழிலாள்+++===

பூக்காட்டு வீதியிலே
புலர்வேளைப் பொழுதினிலே
கைக்கோர்த்து நடைப்பயிலும்
காலமது வாராதோ...

செண்பகப்பூ நிழலெடுத்து
சித்தாடை உனக்குடுத்தி
செல்வராணி உன்னழகை
செங்கவியாய் வடிப்பேனோ...

மொத்தவிரல் சொடுக்கெடுத்து
முத்(த)துநகை யில் குளித்து
கொடுக்காபுளி செவ்வுதட்டை
கொஞ்சும் நாளும் கூடாதோ...

பண்ணவிதை பொட்டுவைத்து
பக்குவமாய் தொட்டணைத்து
குண்டுமணி கோர்த்துமாலை
போட சுகம் கூடாதோ...

தும்பைமலர் தோட்டத்திலே
பட்டாம்பூச்சி தான் பிடிக்க
துணையாக உனையழைத்து
துள்ளல்கண்டு வாழ்வேனா...

துவரம் பூப் பிடுங்கி
சொட்டும்சுவை தேனுறிஞ்சி
இருவரும் சேர்ந்திருக்க
என்று அந்த நாள்வருமோ...

முடக்கத்தான் காயெடுத்து
நெற்றியிலே தான் உடைத்து
''டப்''பென்ற சத்தத்தோடு
''இச்'' சத்தம் சேர்ந்திடுமோ...

சேலாடும் விழிகளிலே
திரையோடும் காதலினை
தினம் சுமந்து நிற்பவளே
தேவக்கன்னி நீயல்லோ...

சேலையிலே மூடிவைத்த
செப்புசிலை பேரழகி - உனை
சிரையெடுக்கும் நாளெண்ணி
சித்திரமே உருகுறேண்டி..

முத்துப்பல் மோகனமே
மூன்றாம்பிறை லட்சணமே
குண்டுநிலா முகம்கொண்ட
குமரிமயில் நீதானே...

பொதிகைமலைத் தென்றலைபோல்
போர்த்துதடி உன்நினைவு
பொங்கிவரும் கங்கையைப்போல்
பொங்குதடி உள்ளுணர்வு...

சந்தம் உரைக்குதடி - உன்
சங்கு கழுத்தழகு
சுண்டி இழுக்குதடி - உன்
சொல்லின் தமிழழகு...

அழகில் தரித்தவளே
ஆலம் குருத்தவளே
நீளம் உன் நேசம்
நெஞ்சில் சுகவாசம்...

மூங்கில் மென்கரங்கள்
செங்காந்தாள் மலர்விரல்கள்
தழுவும்நாள் சுகமல்லோ
பருவத்தவ பயனல்லோ...

நுரைத்தக்கடல் அலைபோலே - உன்
நினைவில் மனம் குமிழ்கிறது
ஆத்தாடி உன் பேச்சில்
அணிச்சைமணம் கமழ்கிறது....

ஆசைகளும் மலையளவு
கற்பனைகள் வானளவு
அனுபவங்கள் எல்லாமே
அன்பே சிறு கடுகளவு...!!!


------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (22-May-14, 2:09 pm)
பார்வை : 136

மேலே