என் அதட்டல் அப்பா
திருட தெரியாத வயதில்,
அப்பாவிடம் இருந்து 10 ரூபாய் திருடி விட்டு ..,
"அப்பா உனட்ட இருந்து 10 ரூபாய் திருடிட்டேன்..!
என்னை அடிப்பியா !?? "
என அப்பாவிடமே நான் கேட்க,
என்னை அடிக்கவா? சிரிக்கவா ? என
குழப்பத்தோடு என்னைப்பார்த்த என் அப்பா.. !!!
அப்பா அணைத்து போட்ட சுருட்டு பீடி,
திருட்டு பீடியாய் என் கையில் மாற,
அந்த கண்கொள்ளா காட்சியை கண்டவுடன்,
உதைக்கவா, மிதிக்கவா ? என
என்னைப்பார்த்த என் அப்பா.. !!!
"எம்டன் மகன்" படம் பார்த்து வந்த ஜோரில்,
என் அப்பாவுக்கும் "எம்டன்" என பெயர் வைத்து
சிரித்ததை என் உண்மைவிளம்பி அம்மா,
அப்பாவிடம் போட்டு கொடுக்க,
கொலைவெறியில் என்னை பார்த்த என் அப்பா.. !!
"சென்னைக்கு போறேன்" என்ற வாக்கியத்தை
முடிக்கும் முன், அம்மா ஆரம்பித்த அழுகை
ஆர்பாட்டத்தை
அதட்டலில் முடித்து வைத்த என் அப்பா.. !!
ஒரு வருடத்திற்கு இரு முறை மட்டுமே செல்லும்,
இந்த அன்பு மகளை, இப்பொழுதெல்லாம்
அன்பு சட்டை மட்டுமே அணிந்து,
வரவேற்கிறார் அந்த
என் அதட்டல் அப்பா.. !!! :-)