ரோசக்கார கிழவி
ஒருநாள் தேவைக்கு இரண்டு ,மூன்று பாட்டிலில் தண்ணீர் நிரப்பி,கையில் வெற்றிலை பையும் ,கால் மாட்டில் தட்டும்,தாங்கி பிடிக்கவும் ,அருகில் வரும் நாய்களை விரட்டவும் கம்புடன், நடக்க முடியாத ஒரு பாட்டி,ஒரு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும்.எனக்கு ஒரு சந்தேகம்,இந்த பாட்டிக்கு யாரும் இல்லையா ?வீடு வாசல்..பேரன் ...பேத்தி...சொந்தம் .....விசாரித்ததில் தெரிந்தது.... அந்த பாட்டி உட்கார்ந்து இருப்பது அதன் வீடு..... மகன் அடித்ததில் தான் நடக்க முடியாமல் போனதென்று...நடக்க இயலாத பாட்டி வீட்டில் இருந்தால் ...வீட்டை அசிங்கம் செய்து விடும் என்பதால் அதிகாலையே வெளியேற்றி விடுவார்கள் ...பாட்டி இயற்கை உபாதைகள் கழிப்பது எல்லாம் அருகில் ஓடும் சாக்கடை தான் ..சரி மழை பெய்தால் ?எப்படி மழை பெய்தாலும் இரவு தான் வீட்டுக்குள் அனுமதியாம்.ஒரு நாள் அந்த வீட்டின் வாசலில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.பாட்டி இறந்து விட்டதாக தகவல்.
சரியாக ஒரு வருடம் கழித்து,அந்த வீட்டு வாசலை கடக்கும் பொழுது அந்த பாட்டிக்கு திதியாம் .பதினாறு வகை காய்களோடு உணவு படைக்கப்பட்டு காக்கைக்கு வைத்து ,பாட்டியின் வரவை எதிர்பார்த்து இருந்தார்கள் .நீண்ட நேரம் கழித்து பறந்து வந்த ஒரு காகம் ...பாட்டி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து ..பறந்து சென்றது ..அவர்கள் வைத்த உணவை எடுக்காமலே.பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பேசியது நடந்து செல்லும் பொழுது என் காதில் விழுந்தது "ரோசக்கார கிழவி."