பொழுதறிந்து போராடு
புலம்புவதில் புண்ணியமில்லை
புறப்பட்டு போராட
நீண்டு படுத்துக்கொண்டாள்
நிமிர்ந்து நிற்க முடியுமா ?
நிம்மதியை மீட்க
நீண்ட பயணம் தேவை
வெற்றியும் தோல்வியும் விதியில்லை -
எல்லாம் உன்னிடத்தில்தான் இருக்கிறது ......
பொழுதறிந்து போராடு
கூகையிடம் காக்கை தோற்கும்
காக்கையிடமும் கூகை தோற்கும்
பொழுதின் மாற்றத்தால் .......
வாய்ப்புகளுக்கு காத்திருப்பவனே
வழிதேடி விழித்திரு
வெற்றியின் விளிம்பில்
விரைவில் உனக்கும் இடம் .......
விதியை காரணம் சொல்லி
விளையாட்டு காட்டுபவனே
உழைப்பின் வலிமையை
உணர்ந்திருப்பாயா நீ ?
வேடிக்கை பார்த்திருந்தால் -
விதியை காரணம் காட்டியிருந்தால் -
குருவிக்கு கூடு கிடைத்திருக்குமா ?-
குயிலுதான் குஞ்சு பொறித்திருக்குமா.......
பலமும் பலவீனமும்தான்
மனிதனின் கலப்பிடமும்
தன்னம்பிக்கைதான் உன்னை
தலைமைக்கு கொண்டு செல்லும் ........