அவளைப்பற்றிய சில குறிப்புகள்
நீ பூங்கா இருக்கையில்
விட்டுச் சென்றதன்
ஏக்கத்தில்;
பூக்கள் தான்
சொல்லியது என்னிடம்
உன் பெயர்
தேவதையென்று...
உன் கால்களின்
மௌனங்கள்
டக் டக்கென
உடைந்து
இசைக்கிறது...
நீ
நடக்கையில் தான்
நிசப்தங்களின்
சப்தம் கேட்கிறது...
உன் தெற்றுப்பல்
சிரிப்பினைக்கூட
சிறை போட்டு
சில்லுகலாய்
உதிர்க்கிறாய்...
பிடித்தமான உடைகளை
நீ அணிந்து வருகையில்
எனக்கும் சற்று
பிடித்துத்தான் போகிறது
உயிர் சுற்றிப்பற்றும்
காதல் குரொமொசோம்களால்..
பிழையான
முக பாவனைகளிலும்
சரியாகத்தான்
இருக்கிறாய் நீ;
கண்ணாடி தான்
சிவந்து போகிறது
வெட்கத்தில்
உன்னைப் பார்க்க முடியாமல்..
விசைப் பலகையில்
இசை மீட்டுகிறாய்
உன் விரல் கொண்டு...
திரை பார்க்கும்
முகத்தில்
நகர்கிறது காதல்
முகில்...
ஒரு குடை பிடித்து
அடை மழை தவிர்த்து
உன் இதழ்மழையில் நனைந்து
வியர்த்தேன் முற்றிலுமாய்...
உனக்கான மழையில்
என்றுமே
நனைந்து போகிறது
என் காதலின் ஈரங்கள்
நீ துவட்டுவாயென்ற
துளி நம்பிக்கையில்...
காதுகளிடம் காற்று
பேசும் ரகசியங்களுக்கு
பதில் சொல்லாமலே
தலையாட்டுகிறதுன்
தங்க தோடுகள்..
உன் தொடுதலில்
பனி படரும்
நீ தீண்டினால்
தீ மூளும்...
மின்னலின்
மிச்ச மின்சாரம்
உன் கை விரல்களால்
நீ என்னுள்
பாய்ச்சிய காதல்..
விழி திரளும்
நீரில்
வீழ்ந்து தேடுகிறேன்
கசிந்து உடையப்போகும்
காதலின் முதல்
கடைசி துளியினை...