தமிழ்த்தாயிடம் என் புலம்பல்
என்னைக் கருவுறாமலேயே பெற்றெடுத்த
தமிழ்த்தாயே !
உன்னைக் கொலை செய்ய
கொடுவாளாய்
அவதாரம் எடுத்துள்ளது
உன் செல்லப் பிள்ளைகளின்
"ஆங்கில மோகம்"!
ஆங்கிலவழிக் கல்வி கற்றால்தான்
உலகறிவு அதிகரிக்குமாம் !
பாவம் !
அவர்களுக்குத் தெரியவில்லை போலும் !
கோள்கள் பற்றிய சிந்தை
உதிக்காத போதே
நவக்கிரக வழிபாடு எங்களுக்குக்
கற்றுத் தந்தவள் நீ !
அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டி
குறுகத் தறித்தக் குறள்
என்று பாடி
அணுவை பிளக்கும் அறிவியலுக்கு
வித்திட்டவள் நீ !
அறிவியல் அறிவையும் அனுபவறிவையும்
எங்களுக்கு கற்றுத்தந்தவள்
நீ !
அனால் இன்று உன்
பிள்ளைகளாகிய நாங்கள்
தமிழில் பயில்கிறோம் பேசுகிறோம்
என்ற காரணத்தால்
ஏளனச்சொல்லால் சவுக்கடி வாங்குகின்றோம் !
"தாயே"!
உன்னிடம் முறையிட்டு விட்டேன்
இனி எங்களுக்காக
நீ வாதிடு !
தமிழ் வாழ
வாழ வைக்க !