யாவற்றிலும் உனக்கு நீ மட்டுமே துணையாவாய்
விழிகள் கனக்கின்றன
கண்ணீர்ச் சுமையால் ..
துயரத்தின் சுவடுகள்
கண்ணீர்க் கோலங்களாய்
முகம் முழுதும் ..
அழுகிறேன் ,அழுகிறேன்
இனி அழுவதற்கு
கண்ணீர் இல்லையெனும் வரை ..
துடைப்பதற்கு விரல்கள்
வருமென துயரத்தை
மிச்சம் வைத்தேன் ..
நொடிகள் தொடங்கி
நிமிடங்கள் விரைந்து
மணித்துளிகளில் செல்லும்போது
உணர்ந்தேன் ,அது
எந்த விரல்களும்
எந்தன் கண்ணீர்ச்
சுமை குறைக்க
வரவில்லை,வழியில்லை
அவர்களுக்கு ..
உப்பு நீர் பட்டுக்
கரித்த உதடு வறட்டு
புன்னகையில் விரிந்தது
விதியை உணர்ந்து ..
குனிந்து கைகளைப்
பார்த்தேன் ,பத்து
விரல்கள் இருந்தன
என்னிடமே ..
நானே அறியாமல்
விக்கித்து நின்ற போதிலே
விழிநீர் கரைபுரண்டோடியது ,
மகிழ்ச்சி வெள்ளத்தால் அல்ல !
பிறர் கையை
எதிர்பார்த்து தன்கையை
மறந்து போனேனே என்று !!