சாவு வீடு Mano Red

அய்யய்யோ என
அழுகை சத்தம்,
அக்கம் பக்கமெல்லாம்
அதிர்ந்து கூடி
அழுகைக்கு அழுகை சேர,
அமைதியாய் பிரிந்த்திருக்கிறது
அதிர்ஷ்டம் செய்த உயிர்..!!

கன்னத்தில் கையும்,
ஒப்பாரி சத்தமும்,
தலைவிரி கோலமும்,
பூக்களின் அழுகையும்,
சாவு வீட்டை இன்னும்
சத்தமாக ஊருக்கு சொல்லியது..!!

ஒவ்வொரு மனிதனும்
ஒத்திகை பார்க்கவே
சாவு வீடு வருகிறான்,
மரணத்தை பயமின்றி
எதிர்நோக்கவே
பழக்கப்படுத்தப் படுகிறான்..!!

இருந்த போது
பேசாத பெருமையெல்லாம்,
இறந்த பின்பு
தெளிவாகப் பேசப்படுகிறது..!
பிணத்திற்கு கேட்காது என்பதால்
செத்த பெருமை சொல்ல
பொய்களும் அங்கே பிறக்கின்றன..!!

அங்கு நடப்பதில்
மிகவும் வேடிக்கையான ஒன்று,
எதுவுமே தெரியாதது போல
இன்றைய பிணத்தைச் சுற்றி
அழுது கொண்டிருக்கும்
நாளைய பிணங்கள்...!!

எதையும் எளிதில்
ஏற்றுக் கொள்ளாத மனிதன்,
மரணத்தை மட்டும் எப்படி
எளிதில் ஏற்றுக் கொள்வான்..??
எமனின் தர்மங்கள்
எடுபடாமல் போவதும் இங்குதான்..!!

நிம்மதியாக
மண்ணை விட்டு
தப்பிச் செல்கிறோமென
இறந்தவர்கள்
மனதுக்குள் சிரிப்பது
பாழாய்ப்போன மனிதனால்
கேட்க முடிவதில்லை..!

கோடித் துணிக்கும்,
முழத் துண்டுக்கும்,
முக்கால் பணத்திற்கும்,
கிடைக்கும் மரியாதை
மனிதர்களுக்கு
எப்போதும் கிடைப்பதில்லை
சுடுகாட்டில்...!!

எழுதியவர் : மனோ ரெட் (27-May-14, 1:04 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 68

மேலே