பெண்ணே சொல் உன்னையும் பாடவா

"தமிழில் அலங்காரங்கள்?"
நிறைய உண்டு! ஐயமில்லை

"அணிகள்?"
வரிசைப்படுத்தவா? பஞ்சமேயில்லை

ஏன் உன் வில்லொத்த உதடுகளில்
இருந்து இந்த திடீர் கணைகள்?

(மௌனம்...
...மூச்சுக் காற்று கேட்கும்படி மௌனம்!)

"ஓ!..."

(நிசப்தத்தில் நிதானமாய் விளங்கியது)

"இவ்வணிகள் கொண்டுன்னை அலங்கரிக்கவில்லையே நான்,
காரணம் அதுவா?
சொல்லடிப் பெண்ணே!"

வில் ஒடிந்தது...

"உன்னை பாடாததற்கு காரணம் சொல்லவா?

(என்ன விந்தை! இப்போது வில்லாயின புருவங்களும்...)

"பொறுமை காத்துக் கேளடி..."

"மேலே எட்ட நிற்கும்
அந்த தட்ட முகக்
குளிர் வட்ட நிலாவைப் பாடித் திரிந்தேனே!

வார்த்தைச் சுட்டதாலோ,
கண் பட்டதாலோ,
அமாவாசை யிருட்டில்
'மதி'யழகி மெலிந்தே போனாளே - தெரியுமா உனக்கு?"

"இதழ் விரித்த
முகஞ் சிரித்த பூவொன்றை
உடன் பரித்து,
கவிச்சோலை அமைத்தேனே!

என் வார்த்தை வண்டு களுக்கு
தேன் உண்டு களிக்க
வாய்க்க வில்லையே!
பூமகள் வாடிப் போனாளே! - புரிந்ததா உனக்கு?"

"மேகம் பிழிந்து, அவள்
தாகம் தணிப்பாள்!

கோடைத் தழல் போக்க
குடை நிழல் தருவாள்!

அந்த 'தரு'மகள் குளிரும்படி
க'விதை' தூவினேனே! யாது பயன்?

சுரம் சேர்க்கும் அவசரத்தில், சொல்லில்
உரம் சேர்க்க மறந்தேனோ?

மும்மாரி பெய்யா திருந்தேனோ?
இடம்மாறி போய் திரிந்தேனோ?

சருகு சருகாய் கண்ணீர் விட்டே
விரக தாபத்தில், விறகாய் ஆனாளே! - விளங்கியதா இப்போதுனக்கு?"

அழகி அவள் , அழுது
பழகி யவள்....

முற்றிய வார்த்தையில்,
ஒரு கண்ணில், நைல் நதியும்,
மறு கண்ணில், நயாகராவும்!

இப்போது என் செய்ய...!?!

போகட்டும் என,

நிலவென்றேன்...
நிறுத்தி வைத்தாள் நீரை!

மலரென்றேன்...
மன்னித்தாள் என்னை!

மலர் சூடும் மரமென்றேன்...
புன்னகைப் பூ பூத்தாள் உடனே!

எழுதியவர் : வைரன் (28-May-14, 7:16 pm)
பார்வை : 1710

மேலே