நிஜம் தேடும் என் மனதின் உணர்வுகள்

பாரதி கண்ட புதுமை பெண்ணாய்
நான் வாழ வேண்டும்...
இயற்கையோடு தமிழ் எழில்கொஞ்ச
எந்தன் தமிழர்களுக்காக என்னுயிர்
இம்மண்ணில் தானமாக வேண்டும்..

வான் மின்னல் மிளிர்ந்திடும்
பார்வை வேண்டும்..
அதில் வெறிமிகு கண்கள்
இருள் சூழ மூடிட வேண்டும்...

மேக கூட்டம் மோதிஎழும்
இடிமுழக்கமென வீரகுரல் வேண்டும்..
அவ்வொலிதனிலே எட்டுத்திக்கிலும்
நீதிவேண்டி தினம் சாட வேண்டும்...

எறும்பு கூட்டம் சாகாத அமைதிமேவிய
பணிவுநடை வேண்டும்...
அந்த மெல்ல நடைஅழகில் கல்,முட்கள்
பஞ்சுமெத்தையென பூவிரிக்க வேண்டும்..

பிறர் வலிகள் காணுமிடம் என்னில்
மழை சிந்தும் கண்கள் வேண்டும்...
அந்த மழை கொண்டும் மக்கள்மனதில்
புன்னகை பூ விளைக்க வேண்டும்...

புகழ்ச்சி இகழ் கண்டும் தோல்விகாணா
திங்கள்செய்யும் கடமை வேண்டும்..
விடியல் பாதை வீழ்த்தும் தடைகள் கண்டு
சோர்ந்திடாது உழைக்க வேண்டும்...

காற்று பாதையில் வான் எட்ட பறக்கும்
காற்றாடியதன் சுதந்திரம் வேண்டும்...
உயிர் காற்றில் கட்டிய என்வாழ்க்கை
என்னவன் இசைவினிலே சுதந்தரிக்கவேண்டும்..

உயிர் காற்றாய் சுயஆசை இருந்தும் அதன்
எல்லை உணறறிவு வேண்டும்..
ஆசை பஞ்சம் அகிலம் வெறுக்கவைத்தும்
பேராசை அழிவோடு ஆயுள் குறைக்குமென்ற
தகுதியறிந்த ஆசை வேண்டும்..

அழகை கெடுக்க தினம் அழிவை கொடுக்கும்
இயற்கையொப்ப பொறுமை வேண்டும்...
அவ்விதமே கொஞ்சும்மனதை தஞ்சம்கொண்டே
மிஞ்சும் மனதின் வஞ்சம் தீர்க்க வேண்டும்..

மரணம் கொள்ளையிட மீளாவுயிராய்
என் காதல் வேண்டும்...
புனிதம் இழக்க வாழ்வில் காதல் கொண்டால்
எனக்குள் இணை துறந்த வாழ்க்கை வேண்டும்...

உடல் கூண்டில் உயிர் வளர்க்கும்
எஜமான்மேல் முழுநம்பிக்கை வேண்டும்
அனுதினம் அவனிடம் நான் நன்றி பகிர்ந்திட
பயம் குளிராய் பக்தி(தீ)யை உணர வேண்டும்...

பகல் தொடரும் இரவாய் பிரிவில்லா
நட்பு வேண்டும்...
பாரினில் இருள் ஒளி சேர்ந்தே கடக்க
உறுதி கொணர் துணிவாய்
நல்ல நண்பர்கள் வேண்டும்...

உறைய,உருக.உலர என்றே நீர் தன்மையான
நல்ல மனது வேண்டும்..
அடக்கி,பகிர்ந்து,ஈர்க்கும் என் உணர்வினிலே
தெளிந்த எண்ணம் வெளிகொணர வேண்டும்...

மனக்கடலில் கொட்டிசேர்த்து விடியல்காண
தேடல் கனவு கோடி வேண்டும்..
மெய்க்கும் கனவை தகர்த்தெறியும்
சிறியோரை கடல்சீற்றமென புரட்ச்சி
அலையால் எதிர்கொள்ள நற்துணிவுவேண்டும்..


.....கவிபாரதி....

எழுதியவர் : கவிபாரதி (30-May-14, 12:53 am)
பார்வை : 171

மேலே