தோழி

கன்னங் கரியநிறச் சின்னக்குயிலோன்று
விண்ணில் பறக்குதடி !தோழி! _தமிழ்ப்
பண்ணை இசைக்குதடி !
வண்ணக் கலாபமயில் மின்னும் சிறகாட்டி
மண்ணில் ஆடுதடி !தோழி!- தமிழ்ப் பேகன்
தன்னைப் பாடுதடி !
இல்லையோ என்னும்மிடை புல்லி இத ழோரம்
முல்லை சிரிக்குதடி !தோழி!- தமிழ்ப் பாரி
வள்ளலை பாடுதடி !
தத்தி தவழ்ந்திடும் சித்திரப் பைங்கிளி
நித்தமும் பேசுதடி !தோழி !-என்றும்
முத்தமிழ் பேசுதடி !
கோலவிழி காட்டிக் கொஞ்சும் கரமாட்டிக்
குழவி சிரிக்குதடி !தோழி !-தமிழ்
மழலை ஒலிக்குதடி !
கல்லும் மணலும் தோன்றாமுன் பிறந்த
கன்னித்தமிழ் மகளே!நீயும் தமிழ்ச்
சொல்லையே பேசிடடி!
கத்தும் கடல்கடந்து இத்தரை மீதெங்கும்
முத்தமிழ் பரப்பிடடி !தோழி !-நம்
மண்புகழ் காத்திடடி !
s