வெள்ளை வான் White Van

கொடிய மரணத்தை
தலையணைகளின் மேல் வைத்து
நிலத்தில் நெளியும் தீயின் புகை
கண்ணீரில் உறைந்த முகத்தின் சிதிலத்தில்
அழுவது குறித்து கவலையிடாது சிலைகளாய் எழுகிறது

யுத்தம் நெரித்த குரல் வளையிலிருந்து
மீட்சிக்கான சத்தம் முதுமரமாய் துளிர்த்து
நெடுமூச்சுடன் உடல்களாய் நகர

கடத்தல்களுடன்
சித்ரவதைகளுடன்
வன்புணர்வுகளுடன்
இரப்பை பசித்திருந்த அம்பாந்தோட்டை அரசனின்
வெள்ளை வானிலிருந்து
மணி இலையான்கள் கலைகின்றன.

இங்கு ஒரு சாட்சி வெள்ளை வானிலிருந்து கலைகின்றது
நாறிய உடலிலிருந்து துகள்களைளைத் தூக்கிச் செல்கிறது

இரத்தம் சொட்டும் உடலில் அவகாசமில்லாது
ஊரத் தொடங்கும் வேட்கையின் பாடல்
வழி நெடுக மூச்சு விடத் திணற

மரண நெடுவாடை அதீதமாய் சுழலும்
கொலைக் களத்தில்
நான் அழுவது குறித்து கவலையிடாத
நீங்கள்
புதையுண்ட எனது எலும்புகளின்
சொற்களை
கவிதைக்கு சேர்க்க.

கலகம் இதழில் வெளிவந்த எனது கவிதை

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (3-Jun-14, 7:30 am)
பார்வை : 79

மேலே