பணக்காரப் பேய்கள்Mano Red
அவன் இவன் என
ஏக வசனம் வேண்டாம்,
எட்டி மிதித்து அழிக்க
எல்லோருக்கும் கால்களுண்டு,
தலை குனிந்து நின்றவர்களுக்கு
தலை எடுக்கவும் தெரியும்..!!
பாகுபாடு பார்த்து
பகட்டு மனதோடு வாழும்
பணக்கார உலகம் இது,
பல்லை இளித்துக் கொண்டே
பகல் வேசம் போடும்
பேய்க் கூட்டம் இது ..!!
கை கூப்பி வணங்கி
கால் கழுவியவனுக்கு,
கழுத்தைப் பிடிக்க
கணப்பொழுது போதும்,
காற்றுக்கு புயலாக மாற
கற்று தர யாரும் தேவையில்லை..!
அடித்து அடித்தே
அடிமைகள் ஆக்கியிருக்கலாம்,
அரை வயிற்று கஞ்சிக்கு
அலைய விட்டிருக்கலாம் என,
அதிகார தோரணையில்
அடக்கி ஆண்டதெல்லாம்
அந்தக் காலம்...!!
முதலாளிகள் எல்லாம்
முதலில் ஓடி விடுங்கள்,
எஜமான்கள் எல்லாம்
எகிறி விடுங்கள்,
சிதறிப் போன
சிங்கங்கள் எல்லாம்
கோபம் சூழ்ந்து
கர்ஜிக்கப் போகின்றன..!!
ஏய் அதிகார வர்க்கமே
ஏமாளிகள் அல்ல நாங்கள்,
ஏணியாக இருந்து
ஏற்றிவிட்ட எங்களுக்கு
ஏறி மிதித்து
எதிர்க்கவும் தெரியும்..!!
இனிமேல்
எங்களின் எதிர்காலம்
எங்களின் கையில்..!!