உலக அதிசியங்களில் ஒன்று

நானுறங்க நீ கிளம்ப
நீ வருமுன் நான் கிளம்ப
சாப்பாட்டு சகிதத்திலும்
சட்டியிலும் தட்டினிலும்

உன் கைரேகை தடயங்களை
என் கைவைத்து தடவுகையில்
உன் கைரேகை பதிவொன்று
என் கைநிறுத்தி படர்கிறதே

நீ உன்னோடும்
நான் என்னோடும்
தானாகப் பேசுகிறோம்
தனியாகிப் பேசுகிறோம்

கண்டுங்காணா வாழ்வென்ன
காலஞ்சென்று வாழ்ந்தென்ன
யாரைத்தான் சபித்துவிட
யாரென்ன செய்துவிட

உனக்கென்னையும்
எனக்குன்னையும்
சேர்த்துவைத்து
தள்ளிவைத்த

நாளொன்று கேட்டிருக்கு
நான் தொலைத்த
நாம் சேர்ந்து, நாள் சேரும்
நாளென்றோ?

உரசிக்கொள்ள நேரமின்றி
ஊர்சுற்றிப் பேருமின்றி
பயணப்படும் தூரத்திலும்
பணம்படுத்தும் துன்பத்திலும்

எம்மனையாளே
என்னவளே

உன்னோடு நானமர்ந்து
உண்ணுகையில்
உப்புமாவும் நமக்கின்று
உலக அதிசியங்களில் ஒன்று

எழுதியவர் : சர்நா (3-Jun-14, 3:18 pm)
பார்வை : 598

சிறந்த கவிதைகள்

மேலே