சித்திரப் பாவை

பாதி சாய்த்த இரு
கோடுகளை இணைத்து
மேற்கூரையிட்டு அதன்மேல்
புகைபோக்கி வைக்கிறாய்...

செவ்வகங்களை குறுக்கே
கோடிட்டு ஜன்னல் செய்கிறாய்...

'ப' வை தலைகீழாக்கி
'வா' வென வாசல் கதவுகளை
திறந்தே வைக்கிறாய்...

இருபுறமும் தலை சாய்த்து
வரவேற்பை உதிர்க்கிறது
கொன்றை மரப்பூக்கள்
சிவப்பும் மஞ்சளுமாய்...

மலையின் இடுக்கில்
சூரியனுடன் ஒளிந்து
விளையாடுகிறாய்...

ஆறுகளை எப்போதும்
அசுத்தமின்றியே காண்பிக்கிறாய்...

பட்டாம் பூச்சிகளை
பறக்கவிட்டு
பக்கத்தில் தேன் மலர்களை
சேர்த்தே செடியிடுகிறாள்...

வண்ண மீன்கள் நீந்திட
வெண்பக்கம் முழுதும்
நீல நீரிட்டிருக்கிறாய்...

பறவைகளை எப்போதும்
காற்றிலே மிதக்க வைத்து
பூமியே சுதந்திர கூண்டென்கிறாள்...

நீண்ட காகிதத்தில் எல்லாமும்
நிறைத்து வைக்கிறாய் நீ
இயற்கையின் ஓவியமாக;

பின் மேற்புறத்தின்
மத்தியில் தலைப்பூ இட்டு
இடப்பக்கத்தின் எதிரில்
கீழ்வாட்டில்...

பச்சை நிற கோலமிட்டு
மஞ்சள் பூக்களை உன்னை
சுற்றி தூவிக் கொள்கிறாய்...

ப.சுசீலா
5-ஆம் வகுப்பு 'ஆ' பிரிவு
என்றெழுதி...

எழுதியவர் : பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (3-Jun-14, 5:02 pm)
Tanglish : sithirap paavai
பார்வை : 72

மேலே