காட்டுச்சவாரி

கதிர்வேலு
என் இனிய லாரி ஓட்டுனரே

காட்டுச்சாலையை ஒட்டி ஓடும்
‘மாயாறு’ நதியின் இசை
நேற்றைய இரவை
ரம்மியமாக்கியது

யானைகள்
மூங்கில் முறிக்கும் ஓசைகள்
செவிகளில்
முரசம் வாசித்தன

காட்டின்
இனம்புரியாத நிசப்த ஒலி
வனதேவதைகளின்
ராகங்களோ..?

எத்தனையோ சவாரிகளில்
நேற்றிராவின் சவாரியில் மட்டும்
காட்டெருமைகளைக் கண்டது
கண்கள் செய்த தவமா..?

தூரத்து மலைச்சரிவில்
காட்டுத்தீ
உன் உதட்டு விளிம்பில்
பீடி...

கொள்ளையிரவில் புள்ளியிட்டன
வான்மீன்கள்
வழியெங்கிலும் துள்ளிச் சென்றன
வனமான்கள்

சோலைக்காற்றில்
சொர்க்கமணம் கமழ
மனம் இதமானது...
நம்மை ராஜாக்களாக்கி
லாரியோ ரதமானது

ஆனால் கதிர்வேலு
நீ வண்டிச்சக்கரத்தில்
வேண்டுமென்றே அடித்துப்போட்ட
காட்டுமுயலின் கறியை
நீயே தின்னு…….
எனக்கு வேண்டாம்……

இனி உன்னோடு
காட்டுச்சவாரியும் வேண்டாம்..! (1995)

எழுதியவர் : கவித்தாசபாபதி (3-Jun-14, 6:10 pm)
பார்வை : 104

மேலே