ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள் -8
“முதிராத கவிஞர்கள் அசலை அப்படியே நகல் எடுப்பர், முதிர்ந்த கவிஞர்கள் பக்குவமாய் திருடுவர்” என டி.. எஸ். எலியட் தனது “வேஸ்ட் லாண்ட்” எனும் படைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இனனுக்குக் கீழே புதிதாய் ஒன்றுமில்லை என ஒரு இஸ்ரேலிய ரபி கூறியதை வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதாய்க் கூறுவர். இனன் என்றால் சூரியன். இவ்வாறு யார் எதை முதன் முதலில் தம் சொந்த அறிவினால் கூறினார் என்பதே தெரியாமல் கலை இலக்கியத்தில் திருட்டு மலிந்து விட்டது.
படைப்பு என்பது தனிமனிதனின் கற்பனைத் திறம், மொழிச் செறிவு, இயற்கை, காதல், காமம், ஆகியவை பற்றிய அவனது புரிந்துணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் இருக்கும்போது ஒரு கவிஞனோ, எழுத்தாளனோ அதனைப் படைத்தவன் என்ற வகையில் பெருமை கொள்ளலாம். ஆனால் அவசரமாய், தகுதி இல்லாத நிலையில் ஒருவித அங்கீகாரம் தேவைப் படும்போது, பிறர் படைப்புகளை அபகரிப்பு செய்வதும் அதன் மூலம் பெருமையும் புகழும் ஏன் பணமும் சம்பாதிப்பதும் இழிவான செயலே. இத்தகைய இழிச் செயல் கண்டிக்கத்தக்கது.
சாதாரணமாக ஒரு கருத்தையோ கதையையோ மூலத்தில் இருந்து கடனாய் பெற்று எடுத்தாண்டு பிறிதொரு வகையில் அதற்கு அழகூட்டி அதைப் பரிமளிக்க வைப்பது வேறு. அவ்வாறு புதிய இலக்கியமாகத் துணிச்சலுடன் படைத்து விட்டு அதற்கு மூலம் இதுதான் என மூல படைப்பினை மேற்கோள் காட்டிக் கூறி விடுவதும் உண்டு.
கம்பராமாயணம் என்பது கம்பர் படைத்த ராம காவியம் என்பது யாவரும் அறிந்ததே.. இதனை கம்பர் வால்மீகியை அடியொட்டி எழுதினார் என்பது உண்மையே ஆயினும் வடமொழியில் இருந்த ராம காவியத்தை கம்பருக்கு முன் வடமொழியில் செய்தவர் யாரென நோக்கின்
தேவ பாடையில் இக்கதை செய்தவர்
மூவரானவர் தம்முளும் முந்திய
நாவி னாருரை யின்படி நாந்தமிழ்
பாவி னாலிது உணர்த்திய பண்பலோ
என கம்பர் நூல் வரலாறு கூறுகிறது. வால்மீகி, வியாசர் அகத்தியர் என்பது இம்முவர் என விளக்குகிறது.. கம்பர் வால்மீகி இராமாயணத்தை உள்வாங்கிக் கொண்டு கம்பராமாயணம் படைத்தார். மிக மிக அழகாகப் படைத்தார். எத்தனை அழகு என்றால், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என சொல்லேர் உழவர்கள் சொல்லும் அளவுக்கு கல்லாதவனும் கவியால் மயங்கும் வகையில்ப் படைத்தார். ஆயினும். அவர் படைத்த ”ஏரெழுபதில்” வரும் பத்தொன்பதாம் பாடல், உழவின் சிறப்பினைச் சொல்லுமுகத்தான் இவ்வாறு அமைந்துள்ளது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுலகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிதே
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே.
உழவு என்ற தலைப்பில் 104 ஆம் அதிகாரத்தில் 1033ஆம் குறள்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
எனப் படிக்கும்போது, கம்பருக்கும் இத்தகைய நோய் தாக்கி இருப்பதைக் காண முடிகிறது.கம்பரும் வள்ளுவரும் சம காலத்தவர்கள், உடன் பிறந்தவர்கள் என கதையொன்றும் உண்டு. ஆயினும் இருவேறு நிலைகளில் ஆன படைப்புகளை அளித்தவர்கள் என இருக்கும்போது இதனை ஒரு நோயாகவே இலக்கிய விமர்சகர்கள் காண வேண்டும் என்பது எனது கருத்து.
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் இறுதியில் வெளிவந்த குலமகள் ராதை எனும் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதி பி. சுசீலா அம்மையார் பாடி நடிகை தேவிகாவின் நடிப்பில் பிரபலமான பாடல்
இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
உறவுக்கு ஒன்றே ஒன்று.
ஃப்ரான்ஸி.ஸ் டபில்யூ.போர்டில்லோன் என்ற ஆங்கிலக் கவிஞர் light and love என்ற தலைப்பில் இவ்வாறு ஒரு கவிதை படைத்துள்ளார்.
The night has a thousand eyes
And the day but one
Yet the light of the bright world dies
With the dying sun.
The mind has a thousand eyes
And the heart but one
Yet the light of a whole life dies
When love is done.
இதைப் போலவே நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது மனப்பாடப் பகுதியாக வந்த ஆங்கிலப் பாடல் தற்போது ஒரு பத்தி மட்டுமே ஞாபகம் உள்ளது.
“Who has seen the wind
Neither you nor I
But when the leaves are trembling
The wind is passing by
The wind is passing by.
இந்தப் பாடலுக்கு தமிழாக்கம் தேவை இல்லை என்பதுபோல் அவ்வளவு எளிமையான ஆங்கிலம். ஆனால் அந்தப் பாடலுக்கு தமிழாக்கம் தமிழ் திரை உலகில் இவ்வாறு வந்தது.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா,
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
இந்தத் தமிழ் பாடலின் ராகத்தில் மேற்கண்ட ஆங்கிலப் பாடல் பாடினால் மிக கன கச்சிதமாகப் பொருந்தி நம் காதில் தேனிசை பொழியும்.. அதற்காக நமது கவியரசரை படைப்பகரிப்பு செய்தார் என நாம் காலில் போட்டு மிதித்து விட முடியாது. இக்கட்டுரையில் முன்னரே சொல்லியபடி இது ஒருவகையான காற்றில் பரவும் நோய். உயிர் உள்ளளவும் உடல் நோவு இன்றி கவிஞர்கள் உள்வாங்கி எழுத வசதியான நோய்.
நம் தேயத்து படைப்பாளிகள் மட்டுமே இப்படி என நாம் கூனிக் குறுக வேண்டிய அவசியமே இல்லை. ஆங்கிலப் புலவர் வரிசையில் பிரதான இடம் வகிக்கும் ஷேக்ஸ்பியர் எழுதிய ஹென்றி-6 இல் 70 விழுக்காடு கூச்சமின்றி பிறமொழிக் கதை என அவரது நாடகங்கட்கு விளக்கம் அளித்தவர்கள் கூறுவர்.
கிரேக்க புராணக் கதைகள் ஆகிய இலியட் எனும் புராணத்தில் ப்ரையாம் என்பவரின் மகனாகிய ட்ராய்லஸ் மற்றும் ஹெக்குபா எனப்படும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் காதல் டிரோஜன் சண்டை துவங்கும் முன்பே அப்பெண்ணின் மரணத்தால் முடிந்து விடுகிறது. ஆனால் அதற்கு பிந்தைய புராணங்களில் ட்ராய்லஸ் என்பவன் அப்பழுக்கற்ற நல்மனம் படைத்த காதலன் ஆகவும் க்ரெஸ்ஸிடா என்பவள் டையோமிடிஸ் எனும் வீரனுக்காக ட்ராய்ல்ஸை துறந்தவள் எனும் போக்கில் செல்லும் இந்தக் காதல் கதையை, ஃப்ரென்சு மொழியில் ட்ரோவெரும், அவரைத் தொடர்ந்து யொவானி பொகேசியோவும், பின் ஆங்கிலத்தில் ஜெஃப்ரி சாஸரும் எழுதியதையே ”ட்ராய்லெஸ் மற்றும் க்ரெஸ்ஸிடா” என்ற தலைப்பில் ஷேக்ஸ்பியர் படைத்தார்.
பழங்காலம் இருக்கட்டும். அண்மையில் (2003) டான் ப்ரொளன் எழுதிய “தி டாவின்சி கோடு” எனும் புதினம், கிறிஸ்தவர்கள் கடவுளாக மதிக்கும் ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவின் காதலி மகதலா மரியா என்றும், அவர் மணந்து கொண்டு பிள்ளை கள் பெற்றாள் என்றும் அவளது தலைமுறை இன்றளவும் உயிர்துடிப்போடு வாழ்ந்து கொண்டு இருப்பதாக சித்தரிக்கப் பட்டது. இதுவும் “holy blood and holy grail” என 1967 இல் மைக்கேல் பேய்ஜெண்ட், ரிச்சர்ட் லே, மற்றும் ஹென்ரி லிங்கன் ஆகிய மூவரும் கூட்டாகப் படைத்து 1982 இல் இலண்டனில் ஜோனாதன் கேப் என்பவரால் பதிப்பு செய்து வெளியிடப்பட்டதே. இதற்கும் அவர்களை எழுதிட பாதித்தது L’or de Rennes என 1967இல் ஜெரார்ட் டி செடே மற்றும் பியர் ப்ளாண்டார்ட் சேர்ந்து வெளியிட்ட புத்தகமே மூலம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இப்படி படைப்பகரிப்பு நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருப்பதை தடுப்பதற்கு என இங்கிலாந்தில் முதன் முறையாக “அறிவுசார் சொத்துரிமை சட்டம்” 17 ஆம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டு விட்ட போதிலும் இதில் மூலப் படைப்பாளி தான்தான் என நிருபிப்பதில் உள்ள சிக்கல் காரணமாக அபகரிப்பவர் காட்டில் மழை பொழிந்து கொண்டே இருக்கிறது.
இத்தகைய கலை இலக்கிய திருட்டுக்குச் சிகரம் வைத்ததுபோல் உலக அதிசயங்களில் ஒன்றாகிய இந்தியாவில் ஆக்ராவில் உள்ள தாஜ் மகால் கட்டிடத்தைப் போலவே அச்சு அசலாக ஒரு கட்டிடத்தை பங்களா தேசத்தில் கட்டி இருப்பது தற்போது கண்டு பிடிக்கப் பட்டு
இந்தியத் தூதரகம் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கலை இலக்கியத் திருட்டு வளர வளர நமக்கு நிறைய ரசிக்கும் வாய்ப்பு இருப்பதால் நாம் யோகம் செய்தவர்களே.