பாலோடு தேனாற்றை ஓடவிடு
எரிகின்றத் திரவங்கள் விடுகின்ற புகையாலே
=எங்கெங்கும் அலைகின்ற வளிமீதும் காயங்கள்
திரிகின்ற வண்டினங்கள் தினந்தோறும் பசியாற
=தேனுண்ணும் பூக்களிலும் இரசாயன அமிலங்கள்
விரிகின்ற சிறகெடுத்து விண்தாவும் பறவைக்கு
=வேதனையை கொடுக்கின்ற விசவாயு நாற்றங்கள்
தருகின்ற மனிதாநீ தானுமதன் தாக்கத்தால்
=தான்மாயும் நிலைகண்டும் தடைபோட மறுப்பேனோ?
தொழிற்சாலை கக்குகின்ற துர்நாற்றக் கழிவுகளோ
=தூய்மைக்கு பங்கத்தை விளைவிக்கும் சாபங்கள்.
பொழில்போன்று மணம்வீசும் பூமியதன் மேனியிலே
=பொல்லாத நோய்க்கிருமி பெருக்கெடுக்க தினந்தோறும்
வழிசெய்யும் வகையினிலே வழிந்தோடும் வழியினிலே
=வருகின்றத் துன்பத்தின் வகைக்கிங்கே முடிவேது?
எழிலான வாழ்வுக்கு இடர்தேடும் மனிதா நீ
=எதனாலே உணராமல் இருக்கின்றாய் மண்மேலே?
மனிதத்தை அழிப்பதற்கு மனிதாநீ செய்திட்ட
=மதிகெட்ட ஆயுதங்கள் வெளியேற்றும் கந்தகங்கள்
புனிதத்தை குழிதோண்டி புதைப்பதற்கு வந்திட்ட
=பூப்போன்ற பூமித்தாய் போற்றாத பிள்ளைகள்.
தனித்துவங்கள் வேண்டுமெனத் தவிக்கின்ற ஏக்கங்கள்
=தணிப்பதற்கு பாடுபடும் தன்னலங்கள் கொண்டவனே
இனியேனும் சிந்தித்து இயற்கையதை காப்பாற்றி
=இருக்கின்ற வாழ்வுக்கு இதம்சேர்த்தால் ஆகாதோ?
வாழுகின்ற ஆசையிலே வனமழித்து வீடாக்கி
=வரட்சிக்கு வித்திட்டுப் பார்க்கின்ற மானுடனே
சூழுகின்ற துன்பமென சுற்றாடல் அழுக்காக்கி
=சுயமாக நீயுந்தன் சுகமிழக்கும் போதினிலே
வீழுமிந்த மனிதத்தின் வேரறுந்து போவதனை
=வீறுகொண்டு காப்பாற்றும் வேகமுடன் செயல்புரிந்து
பாழாக்கும் சூழல்தனை பரிசுத்த படுத்திவிடு
=பாலோடு தேனாற்றை பாரினிலே ஓடவிடு.
** மெய்யன் நடராஜ் =இலங்கை.