சும்மா கிடந்த சொல்லையெடுத்து -பொள்ளாச்சி அபி

வானப் பெருவெளியிலும்
அலையும் காற்றினிலும்
இரைச்சல்களின் ஊடாகவும்
திரிந்து கொண்டிருந்தன
அடையாளமற்ற சொற்கள்..!
கண்டபடி எடுத்தாளவும்
காணாமல் புறம்பேசவும்
கட்டற்ற சுதந்திரத்தையும்
கணக்கற்ற வரைமுறையும்
அனுமதித்திருந்தன சொற்கள்..!
விளம்பரத்திற்காகப் பேசியவன்
அதிகாரத்தைப் பிடிக்கவும்
ஊழலுக்கு சாட்சியாக
நிறுத்தியதை எண்ணியும்
வருத்தமுற்றிருந்தன சொற்கள்..!
பேசியவன் வாயிலும்
எழுதியவன் கையிலும்
நுழைந்து வெளியேறி
சிலநேரம் நிம்மதியற்று
சிதைந்திருந்தன சொற்கள்..!
விரக்தியும் கோபமும்
ஆதங்கமும் ஆத்திரமும்
அகத்திலே கொண்ட
சொற்கள் இப்போது
சும்மாதான் கிடந்தன..!
ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி
உழவன் குரலாகவும்
பாட்டாளி பாட்டாகவும்
காகிதத்தில் பதிக்கிறேன்..,
அழகாய் சிரித்தது கவிதை..!
-பொள்ளாச்சி அபி-