கடல் கடந்து பொருள் தேடி-----அஹமது அலி-----

சுகம் தொலைத்து
சுகம் வாங்க வந்த
அதி முட்டாள்கள்(நானும்)

கானி நிலமோ
கறவை மாடோ
பெட்டிக் கடையோ
எதுவோ ஒன்றுக்கு நாம் முதலாளி
நம்ம ஊரில்.....

ஒன்றுமே இல்லாமல் இருந்தாலும்
வெட்டி ஆபீசர்களாய்
பந்தாவாய் வலம் வந்தோம்!

பெட்டிப் பாம்பாய்
நான்கு சுவற்றுக்குள்
முடங்கிப் போனோம் !

சுடச் சுட பரிமாறும்
அம்மாவின் சமையலில் தான்
எத்தனை குறைகளை
சொல்லியிருப்போம்.!

வெந்ததைத் தின்று
வேகாததையும் தின்று
நொந்த போது தெரிந்தது
அம்மாவின் சமையல் ருசி....

சவடால் பேச்சில்
சாதித்தவர்கள் நாம்
இங்கே எத்தனை சட்ட திட்டங்கள்
அத்தனையும் அழகாய் பின்பற்றுகிறோம்
ஓர் அடிமை போல் !

கோபம்
விருப்பு வெறுப்புகளை
கட்டுப் படுத்த
நன்றாகவே பழகிக் கொண்டோம் !

இளமையை இங்கே
கரைத்து விட்டு
முதுமையில் அங்கே
முடங்கப் போகிறோம் !

கரம் பிடித்தவளின் காதலையும்
கடல் தாண்டிய ஏக்கத்தை உணர்ந்தும்
கரை திரும்ப முடியா
அலைகளாய் .....

செல்லக் குழந்தையின்
மழலை மொழி கேட்க
நிமிடங்களை கணக்கிடும்
நிர்பந்தவாதிகளாய் .....

பெற்றோரின்
உடல் நலக் குறைவில்
உடனிருந்து பார்க்க முடியா
துர்பாக்கியசாலிகளாய் ....

உற்றவர், உறவினர்
மரணச் செய்தி கேட்டும்
விழியோரம் கண்ணீரை முட்டிக் கொண்டு
பணிக்கு செல்ல வேண்டிய
வேசதாரிகளாய் .....

சில வருடங்கள் கடந்து
ஊர் திரும்புகையில்
பணம் நம்மிடம் தாராளமாய் இருக்கும்
அதற்காக நாம் தொலைத்த
சுக துக்க உணர்வுகள்
ஏராளம்.. ஏராளம்......

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (7-Jun-14, 7:35 pm)
பார்வை : 403

மேலே