பின்தொடரும் நாள்

யாதறியேன்
மனோ வேகமே !
பின்னோக்கும் வேகம்
யானறியேன் - உலகறியேன்
என்னையன்றிப்
பிடியறியேன்..

அணுவாகிச் சுமக்கும்
ஆசைகளினூடே
அரும்பாகினேன்
அசையாத நேற்றையை
தொட்டறியும்
பிணிகொண்டேன்...

கருந்திரள் மேகங்களே
செப்பனிடும் நாடகத்தை
நாளையும் நடத்துங்கள் ,
வீணாய்ப் போகட்டும்
எனது பயணம் ....

ஆழியுறவாடும்
அரைமனத் திங்களே
இன்றைக்கும்
வரம் கொடு
கனவில்லை இதுவென்று .....

ஏதோ ஒரு
விவரமறிந்த
காற்றுப் பறவை
காணவில்லை ...

பழையதாய்
ஆயிரம் வருடங்களை
கூர்மையாய் எண்ணித்
திரும்புகின்ற
நரம்புகளை மீட்டி
இதயம் படைத்து
இன்னது புரியாது
செத்துவிடத் தோன்றும்
யுக்தியில் ,

சுழலன்றேன்
விதியற்றுச் சிரித்தேன் ;

மொழியற்றுப்
பிதற்றும் நாவில்
கூனித் தாண்டவமாடும்
பேதைமைப் பொருளாகிப்
பீடித்தேன்....

வரையறுத்த வேலிக்குள்
மூச்சுவிடும் மலருக்கு
செடியும் கனம்
வடியும் நீரோ மனம் !

அகழ்வாய்வுப் படி
பிழைப் படிமம்
வருந்தும் வதந்திக்குள்
நிஜமும் நானே - இருளில்
முன்னேறும்
நிழலும் நானே..........!!!

எழுதியவர் : புலமி (10-Jun-14, 12:44 am)
பார்வை : 94

மேலே