எங்கிருந்து வந்தான்
கல்லும் முள்ளும்
கால்களை தைக்காது,
வெயிலின் வெம்மையை
தன்னில் சுமந்து,
கூடவே நடந்த
ஒரு சோடி செருப்புகள்
ஓரத்தில் கிடந்தது!
இருமி இருமி
அமைதியை குலைத்து
உடல் சோர்ந்து
நடை தளர்ந்து
மனம் நொந்து
நோயில் வாடியபோதெல்லாம்
தாங்கிக்கொண்ட
ஆறடிக்கட்டில்
அமைதியாய்க் கிடந்தது!
அணிந்து அணிந்து
அழுக்கேற்றி
அடித்து அடித்து
வெளுத்துக்கொண்ட
அவனின் ஆடைகள்
ஒரு புறம்
அடுக்கி கிடந்தன!
இளமைமை முறுக்கில்
பல்லாண்டுகளாய்
நடந்தும் ஓடியும்
விழுந்தும் எழுந்தும்
பயணங்கள் தொடர்ந்த
பாதைகள் அங்கே
நீண்டு கிடந்தன!
இல்லறம் கூடி
நல்லறம் கண்டு
கேளாமல் பெற்றெடுத்த
பிள்ளைகள் ஒருபுறம்
தம்மக்களோடு
தத்தளித்திருந்தனர்!
இணைந்து இணைந்து
இன்பங்கண்டு
சற்றே கோபித்து
சலனத்தில் பிரிந்து-பின்
மோகத்தில் நிறைந்து
கூடவே வாழ்ந்த
மனையாள்
ஒருபுறம்
நினைத்து நினைத்து
அழுது
நினைவற்று கிடந்தாள்!
இங்கே
முதியவனின் தேகமோ
அசைவற்றுக்கிடக்கிறது!
இவன் வாழ்ந்தானா....?
இவன் வாழ்கிறானா....?
இவன் வாழ்வானா....?
யார் இவன்...?
எங்கிருந்து வந்தான்...?
எங்கு செல்லக் காத்திருக்கிறான்...?
ஆன்மாவா இவன்...?
அதை சுமந்த
உடலா இவன்....?
இரண்டும் இணைந்ததால்
இவன் ஆனானா...?
யார் இவன்
இந்த உறவுகள்,
இவனுக்காய்
துடிக்கிறதே...????