வழித் தடங்கள்

ஊர்வளைத்த சாலைகளில்
நேரெதிர் நின்றாடும்
சுழல்காற்றில்
திரண்டு போகின்றது
வயல்வெளியின் வனப்பு ....

கசந்த நிலத்திடையே
சர்க்கரை கலந்ததுவாய்
புயல் மழை
மூன்று வேளை
மருந்தாகியும் குணமாகவில்லை
வறட்சி ...

மருதாணிச் சிவப்பாய்
அந்திவானம்
அதில் செங்கதிர் நெருப்பாய்
தேதியொன்றின்
கடுந்தவம் கலைகின்றது ....

ஒன்று நினைக்க
வேறொன்றாகத் திரும்புவது
காலத்தின்
இலக்குகளாகவே
இருக்கட்டுமெனச் சரிபார்த்துக்
கொள்கின்றேன்
எனக்கான கேள்வித்தாளை ........

நானே அல்லாதபோது
எதுவோ - என்னை
இயக்கிவிட்டு
துலாக்கோலில்
இறக்கிவிட்டுப் போகின்றது ....

அச்சுறுத்தலைக்
கம்பீரமாய் எழுப்பியிருந்தன
செவ்வாய்கள்
பிளந்த புற்றுகள் - ஒரு
பழமொழியை மட்டும்
அனுமதித்தபடி ...

பொருந்தா
வண்ணங்களுடன்
பறக்கின்றன பூச்சிகள்
நடப்புகளின் வெள்ளையில்
ஓவியங்களாய் .....

இனியானது
ஒன்றுமில்லாததாய்
ஒரு யுகத்தின்
சகாப்த புள்ளியாய்
பெயர்ந்து
எதிர்வரும் தூசிப்படலத்தில்
மொய்த்தது......!

எழுதியவர் : புலமி (10-Jun-14, 3:27 pm)
பார்வை : 103

மேலே