ஆழ்மனதின் ஆனந்தங்கள்

எதற்காகவோ தயங்கி எதனாலோ தவிர்த்து
மயிரிழையில் இல்வாழ்க்கை இழந்தும்
நூலிழையில் நல்வாழ்க்கை அமைந்தும்
கடந்த பாதைகள் கனவுகளில் கண் முன்னால்

இன்று இழந்ததாய் தோன்றும் அனைத்தும்
அன்று நம்மை தேடி வந்தவைகள்தான்
கண் முன் இருந்தை கண்டு கொள்ளாமல்
கனவுகளில் மிதந்து கட்டுக்குள் அகப்பட்டோம்

மனதுக்கு பிடித்தவைகள் மறுக்கப்பட்டு
பிடித்திட மனதினை மறுத்துவிட்டோம்
கல்லெறிந்து மாங்காய் விழுமுன்னே -நாம்
பறித்து கல்லருகே வைத்துவிட்டோம்

சிறிய தவறுகள் பெரிய விபத்துக்களாயும்
பெரிய விபத்துக்கள் சிறியதாகியும் போனதுண்டே
பசிகளின் போது காய்கள்கூட கண்படவிலலை
பசியற்றபோது கனிக்கூடைகள் கண்முன்னால்

இறைவனை நம்பி கைவிட்டாறென்ற சலிப்பு
இறைவன் கைகொடுத்த போது மறந்து
நிழல்களில் இருக்கையில் மரங்களை மறந்து
வெட்டியபின் மனசாட்சிடம் மன்றாடுகிறோம்

காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளாமல்
மனமுள்ளபோது காற்றிடம் கடன் கேட்கிறோம்
நினைத்தது நடக்க நித்தமும் தூக்கமிழந்து
நடந்தபின் தூக்கமின்றி தவிக்கிறோம்

ஆண்டு பலசென்று விழுதுகள் வித்தானபின்னும்
ஆழ்மனதின் ஆனந்தங்களை நினைவுணர்ந்து
இன்றும் வாழ்க்கையை இனிதாய் ரசிக்கிறோம்
இழந்ததை மறந்து தோல்விகளை துறந்து.

எழுதியவர் : நெல்லை பாரதி (11-Jun-14, 3:07 pm)
பார்வை : 101

மேலே