நிச்சயம் ஒரு நாள் விடியும்

"மகாராணி படிச்சு இந்த நாடாள போற மாரி பொம்பள புள்ளைக்கு என்னத்துக்கு படிப்பு ஒழுங்கா வேலைக்கு வந்து சேரு" என்ற முதலாளி முத்தரசியின் வார்த்தைகள் முள்ளாய் கீறியது தமிழிசை நெஞ்சத்தை....
வழக்கத்தை விட பசுமையாய் தெரியும் சாலையோர மரங்களும், அழகிய அந்திவானமும் கூட அவள் கவனத்தை ஈர்க்கவில்லை... அவளது கவலையின் முன் தோற்று போயின...
எண்ணங்கள் எங்கெங்கோ சென்றாலும் கால்கள் சரியாக அவளை வீடு வந்து சேர்த்தது...
அவளை ஆவலோடு எதிர் நோக்கிய தாய் "என்ன கண்ணு வேல ரொம்பவா ? இரு வரதண்ணி போடறேன்" என்று எழுந்த அம்மாவிடம் "வேண்டாம்மா.. நா முதலாளி வீட்டுல சாப்டேன் பசி இல்ல சாப்பாடும் வேணாம் " என சொல்லி தாய் முகத்தை நிமிர்ந்து பாராமல் சென்றாள்...
பார்த்தால் அழுவோமோ என்று வேகமாய் தனது புத்தகத்தை எடுத்து கொண்டு தெருவிளக்கு வெளிச்சத்திற்கு வந்தாள்.
நேரம் கடந்தது தொலைவில் ஒலித்த தேவாலய மணி ஓசை மணி 10 ஆனது என சொல்லவும், மின்மினியாய் ஒளிர்ந்து கொண்டிருந்த தெருவிளக்கு ஓயவும், சரியாய் இருந்தது.
எழுந்து உள்ளே வந்த தமிழிசை தாயின் அருகே சாய்ந்தாள்..
தாய் தனலட்சுமி,, தைரியலட்சுமி என வைத்திருக்கலாம். ஒருவேளை பெயரிலாவது தனம் இருக்கட்டும் என வைத்திருப்பார்கள் போலும்.. அத்துணை இழப்புக்கள் அவள் வாழ்வில். தாயின் முகத்தை பார்த்தவள் தன்னை அறியாமல் அழுதுவிட்டாள்...
திடுக்கிட்டு எழுந்தாள் தனம் " என்ன தமிழ் என்னாச்சு ? ஏன் அழற? முதலாளி அம்மா ஏதும் சொன்னாங்களா ? " என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லை... வெகு நேர அமைதிக்கு பின் கம்மிய குரலில் "அம்மா"என்றவள் "நா படிச்சா நாடாள முடியாதா? பப்ளிக் எக்ஸாம் படிக்க தானே மா நா லீவ் .........." என அழுதபடி கேட்டாள். "அட மக்கு நீ நாடு இல்ல இந்த ஒலகத்தையே ஆளுவ.. என்ன பெரிய வீட்டுல திட்டுனாகளா ? உன்ன போவேணாம் சொன்ன கேக்க மட்டுறியே கண்ணு சரி உன் பரிச்ச முடியுற வரை நா போறேன் நீ அழாத" என்றாள். "வேண்டாம்மா நீ கட்டட வேலைக்கு போயி....." என்றவளை மறித்து நா பாத்துக்குறேன் நீ படு என்றாள்...
"அம்மா எனக்கு புரில மா? அவங்க பொம்பள புள்ளைக்கு என்னத்துக்கு படிப்பு? னு கேட்டாங்க கேட்டவங்களும் ஒரு பெண்... நீ போனா சகுனம், விதவை சொல்றவங்க.. மனைவி இழந்தவங்களுக்கு ஒன்னும் சொல்றது இல்ல
இந்த விதவை, வாழாவெட்டி இந்த வார்த்தைக்கெல்லாம் ஆண்பால் என்ன மா ? காலம் மாறிரிச்சு இல்லன்னு சொல்லல அனா இன்னும் சில விசயங்கள் மட்டும் மாறாமலே இருக்கே ஏன் மா?"" என கேள்விக்கணைகளால் தின்றாடிய தனம்..
"தமிழு இப்டிலாம் யோசிச்சு குழப்பிக்காத விடிய போது தூங்கு" என அணைத்து கொண்டாள்..
கண்ணை மூடிய தமிழிசை "இல்ல மா இன்னும் விடியல அதுவரை எனக்கு தூக்கமும் இல்ல" என மனதுக்குள் சொல்லி கொண்டாள்..
நிச்சயம் ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையுடன்....

எழுதியவர் : சௌமியா (12-Jun-14, 7:27 pm)
பார்வை : 363

மேலே