தீரா வலி

எழுந்தாடும்
வண்ணங்களை
அழுத்தி
ஓவியத்துள் புகுத்தி
உயிர் செய்த
தூரிகையே..!

பசித்த
கண்ணீருக்கு
வழியில்லை
விழியுண்டு-குருட்டுப்
பொம்மையாக்கி
ஓரம் தள்ளுகிறது ….

கையூட்டாய்
கனவுகள் சுரண்டி
காரியம் சாதிக்கும்
பேடியைப் போலொரு
வஞ்சமிட்டு
உயரே வட்டமிடுகிறது
குருதி கொண்டாடும்
பிணந்தின்னிக் கழுகு ….

யாசித்த நாட்களை
சொற்பமாய்
அள்ளி எறிந்தபின்
வெறுங்கையில்
முழமிட்டு
நரம்பறுக்கத் துடிக்கிறது
பற்றறுந்த சதை....

தூரமாய்ச் சென்றதும்
நறுக்கிய
நினைவுகள்
இதயத்தில்
குவிந்து - பாரமேந்திய
பட்டினியாய்
நெஞ்சடைத்து விம்முகிறது …

என்றோ எறிந்த
பந்தொன்றுக்காய்
அனுதினமும்
பல்லைக் கடித்து
கைதியாய்
முடங்கிக் கிடக்கிறது
பிறப்பென்னும்
மந்திரம் …

ஒவ்வொரு முறையும்
தோலுருவிப்
புன்முறுவல் பூக்கும்
காலத்தின்
கசாப்புக் கடையோரத்தில்
வீசியெறியப்பட்ட
வேதனைக்கு
வெட்கம் ஏது?
மானம் மறந்த
ஈனஸ்வரத்தில் - விழுங்கிய
எச்சிலின்
உயிர்ப்பிப்பு பிச்சை
எத்தனை நாளோ ?!

கனன்ற
கங்குக் கட்டிகளாய்
தேகமெங்கும்
பரவும் ரணத்தின்
பெருமூச்சுப் புகைச்சல்களின்
தீய்ந்த வலியில்
மூளை புடைத்த
அனாதை வாசனையை
ரீங்காரமிட்டுக் கவ்வுகிறது
சுடுகாட்டு வண்டு …..

அரையடி
உயரத்தில் - தள்ளாடித்
தகர்ந்து வரும்
ஆகாயப் பதிவிறக்கம்
கண்டதும்
அலைவற்றிக்
கரை முறைத்துப்
பரிதவிக்கும் கடலெனப்
பொங்கிக் குதியாடும்
இறுமாப்பு
உரிந்துகிடப்பதாய்
கெஞ்சிக் கிறங்கியது
அஞ்சியோடிய
உறக்கத்தின் சிதறல் ....

மரண வாசலின்
ஓலக் கசிவில்
சிந்தும்
துளிகளாய்
வழிந்தோடுகிறது
கக்கிய
வலிகளெல்லாம் .....

காணாமலும்
இது நேருமென்று
தடித்த வசையடியிடம்
தலை தப்பிப்
பிதற்றுகிறது
கீச்சிடும் கீறல்கள் …

சாபத்தின்
மன்னிப்பைக்
கைப்பிடிக்குள் கொண்ட
கர்வமாய்
ஆயுளை ஒப்படைத்து
இறந்தபின்
இடிதாங்குகிறது - இந்த
மௌனத்தின் சமாதி …

நெருங்கி
வருகின்றவன்
காலனாய் இருப்பின்
ஜீவ நாடிக்குள்
முகாறி தெறிக்கத்
துள்ளும்
அணுவொன்றைப்
பிளந்து
ஆற்றல் செய்ய
அண்டத்தின் பிரமாண்டம்
அகலட்டும் …..!

எழுதியவர் : புலமி (13-Jun-14, 1:28 am)
Tanglish : theeraa vali
பார்வை : 224

மேலே