முப்பொழுதும் நாம் வணங்கிடுவோம்

முக்கனி சுவையானதோ
முதிர்ந்திட்ட இவர்களுக்கு !
வாழ்ந்திட்ட வாழ்க்கையும்
வாழ்கின்ற காலம் இன்றும் !
பொக்கைவாய் சிரிப்பினிலே
கடந்திட்ட வாழ்வும் தெரியுது !
பொறுமையாய் வாழ்ந்ததும்
பொன்னான பொழுதுகளும் !
சுருக்கங்கள் முகத்தினிலே
சுருக்கமாய் உரைக்கிறது
சுறுசுறுப்பாய் வாழ்ந்ததை
சுற்றங்களுடன் கழித்ததை !
இயற்கையாய் எழுந்திட்ட
இயல்பான சிரிப்பல்லவோ !
இமைகள் மூடி மகிழ்வதும்
இன்பத்தின் எல்லையன்றோ !
செப்புகின்றனரோ இருவரும்
இரட்டையராய் பிறந்ததும்
இவ்வுலகில் எங்களுக்கும்
இரட்டிப்பு இன்பமே என்று !
உடன்பிறப்புடன் வாழ்வதும்
உள்ளத்தில் உவகைதானோ !
இறுதிவரை சேர்ந்திருப்பதும்
இப்பிறப்பின் சாதனையோ !
கருப்பு வெள்ளை படம்தான்
கலப்படமில்லா உள்ளங்கள் !
விருப்பு வெறுப்பை துறந்திட்ட
விவேகமுள்ள இதயங்கள்தான் !
மூப்படைந்த முகத்தின் வரிகள்
முழுவாழ்வின் அடையாளங்கள் !
பொங்கிடும் மகிழ்ச்சி தங்கட்டும்
வழிந்திடும் இன்பம் தேங்கட்டும் !
முதியோரின் படங்கள் பாடங்களே
முறையாக நாம்வாழ வழிகாட்டும் !
முப்பொழுதும் நாம் வணங்கிடுவோம்
முன்னோரையும் முதியோரையும் நாம் !
பழனி குமார்