அம்மா

சேரனவன் நாட்டினிலே,
ஆறுமுகன் அணுவினிலே,
தங்கமவள் பெற்றெடுக்க,
பிறந்தாளே என்னன்னை..

அண்ணனவர் நான்கிருக்க,
தம்பி தங்கையென ரெண்டிருக்க,
இடையினிலே பிறந்தாளே,
அன்பின் அரியணையில் வளர்ந்தாளே..

சமையலறை சென்றதில்லை,
குடம் தூக்கிப்பழகவில்லை,
துடைப்பத்தோடு தகராறாம்
அதையும் அவள் தொடவில்லை..

ஏதோ ஒரு திருநாளில்
தண்ணீர் குடம் அவள் தூக்க,
பகலனாலும் சந்திரனாய்
அண்ணன் விழியதைபார்க்க,
பாழாய்தான் போனதடி,
அன்றே, அப்பணியும் நின்றதடி..

பெற்ற மனம் படபடக்க
பொறுப்போடு இருவென்று,
பணியள்ளி தலைவைக்க..
தங்கையவள் திருமேனி
பணிசெய்யத் தாங்காது,
அண்ணனவர் இடைமறிக்க..
முடி சூடா ராணியென
கொத்து முடியுடையாள் வாழ்ந்தாளே..

பருவத்தில் பயின்றிடவே
பொதுத்தேர்வும் வந்ததுவே,
தேர்வுக் கேள்வியது தாயவளின்
தகுதிக்கு நிகரில்லை,
நிகரில்லா கேள்விக்கு
பதில் சொல்ல மனமில்லை,
பின் நடந்த கதை எனவென்று
நான் சொல்லத்தேவையில்லை..

ஐந்தாறு தேனீரை அன்னமவள் கையேந்தி,
அச்சத்தில் விழிப்பந்து தரையோடு தான் மோதி,
தூணில்லா வான்னோக்கி எழவில்லை..
பெண் நாணத்தில், நியூட்டனவன்
மூன்றாம் விதிக்கிடமில்லை..

பண்பாட்டை பறைசாற்ற,
பெண் பார்த்த படையவர்க்கு,
ஆவியிலே வெந்தெடுத்த
வெண்ணிறத்து நூல்புட்டை..
இளந்தேங்காயின் துணையோடு
சுடச் சுடவே பரிமாற..
அவளாளே மனம் நிறைந்து,
பசியாறி வயிர் நிறைந்து,
படையோர்கள் சரி சொல்ல,
பலர் கண்படவே பங்குனியில்,
இரு மணமும் இணைந்ததுவே..

கன்னியவள் கட்டியவன்
கைதொட்டுச் செல்லயிலே,
பிரிவென்னும் நூல்பட்டு
உறவதுவும் நின்றதுவே,
கண் தொட்ட மையன்று
கை தொடாமலே கலைந்ததுவே..

புது இடமும், புது மொழியும்,
தலையணையின் புது துணையும்,
தித்திக்கும் தேனவளை,
திண்டாட செய்ததுவே..

ஆறிரு திங்கள் செலுமுன்னே,
ஈரைந்திங்கள் தவங்க்கொண்டு,
பூஜிக்கும் பூவொன்றை,
கொடியதுவும் பூத்ததுவே..

கைத்தொழிலில் சிறந்திடவே,
துணையவரின் கைகளிலே,
தாளாத பொருள் சேர,
உள்ளத்தால் பூரித்தாள்..

பொருள் சேர்ந்த வேளையிலே,
நிலை கொள்ளும் நீரினிலே,
படகாகத் துணைமாற,
நீராலே வாடிட்டாள்..

படகானத் துணை மீட்க்க,
கரையோடு தான் சேர்க்க,
இடை நோக பெற்றாளே,
மீண்டும் இருபிள்ளை..
அதில், பயனேதுமில்லை..
அவர், கரைசேரவில்லை..

பொல்லாத நீருண்டு
மதி திறக்கவில்லை,
உற்றாரும் சுற்றாரும்
உதவிடவுமில்லை,
முத்தாக அவள் பெற்ற
வித்தான மூவர் தான்,
பொய்யான அவள் வாழ்வில்
பொற்கால எல்லை..

சத்தமிடும் கடிகார துணையின்றி,
அனுதினமும் அதிகாலை எழுந்திடுவாள்,
சோம்பேறி சூரியன் வருமுன்னே,
பல பணியள்ளி முடித்திடவே விரைந்த்திடுவாள்..

வாசல் தெளித்து, கோலமிட்டு,
வெள்ளையமுதை காயவிட்டு,
பள்ளி சேர்த்திய முதல் பிள்ளை
சிணுங்கி சிணுங்கியே எழுந்திடவே
பருகிட தருவாளமுதத்தை..
அவள் பருகும் முன்னே
தொடங்கும் இவளின் மறுவித்தை..

இருக்கும் காய்கறி கழுவியெடுத்து,
நற நறவென அதை சிறுக நறித்து,
எண்ணெய் சட்டியில் வணக்கும் நேரம்,
“அம்மா...” என்றொரு சத்தம் கேட்கும்
அது இரண்டாம் பிள்ளையின் பசியுத்தம்..

அழுகும் பிள்ளையை வாரியெடுத்து,
மாரோடு அதை சேர்த்தணைத்து,
சமையல் வேலையை முடிக்கும் நேரம்..
அடுப்பில் வைத்த தேனீர் மெல்ல
பொங்கி வரும்;
அங்கே “தேனீர் கொடுவென” குடும்பத்தலைவரின்
கூவல் வரும்..

காலை உணவை வாரி கொடுத்து,
மதிய உணவினை பையிலடைத்து,
கணவரும், பிள்ளையும் செல்லும் நேரம்
கட்டில் அருகில் தொங்கும் தொட்டிலில்
பார்வை விழும்;
அக்கணம் மூன்றாம் பிள்ளையின் அழுகைச்சத்தம்
காதில் விழும்..

இப்படியாக சுற்றி சுற்றி,
குடும்பம் பேணித் தனைமறந்தாள்,
தன்னை இழைத்து, எம்மை வளர்க்க
அவளிக்குடும்பத் துரமானாள்

இந்திரையாய் அவள் மண்ணில் வந்தாள்,
எங்களுக்காய் அவள் தன்னைத் தந்தாள்,
குருதி மாற்றியே உண்ணத் தந்தாள்,
நெஞ்சகத்திலே காத்தும் நின்றாள்..

அன்பில்லவளே முல்லையானாள்,
நாங்கள் வளரப் பிள்ளையானாள்,
உலகில் மீதமுள உண்மையானாள்,
உமையவளே எங்கள் அன்னையானாள்.

அன்னையே,
உன்னையே,
என்றும்,
சரண்.

எழுதியவர் : தீபக் பாஸ்கர் (19-Jun-14, 6:08 pm)
பார்வை : 244

மேலே