எனக்கு அண்ணன் உனக்கு நாணா
அதட்டிய போது
அடிபணிந்து போனான்
என் பாட்டன்
சினந்த போது
சிரித்துச் சமாளித்தான்
என் அப்பன்
அடிக்க கையோங்கிய போது
முறிப்பேன் என எழுந்தான்
என் அண்ணன்
அந்தளவும்தான்
அதன்பின்னர்
கொஞ்ச மரியாதையோடும்
நிறைய பயத்தோடும் அவர்கள்.
அண்ணனுக்கு யாரும்
ஆலாத்தி எடுப்பதில்லை
ஆலவட்டம் பிடிப்பதில்லை
பூப்பறித்து பூசிப்பதில்லை
இருந்தும்
அவனே என் கடவுளானான்
ஏன்?
என்னை
படைத்த கடவுள்களையும்
காத்த கடவுள் அவனென்பதால்...
அந்த அண்ணனை தொலைத்து
நான் அழுதபோது
கொழும்பில் நீங்கள்
பால்ச்சோறு கொடுத்து மகிழ்ந்தீர்களாம்
பட்டாசு கொழுத்தி இகழ்ந்தீர்களாம்
அவனை தொலைத்து
நான் கலங்கியதைவிடவும்
உங்கள் அறிவீனத்தை நினைத்தே
பதறினேன்
சத்தியமாய் சொல்கிறேன்
அன்று நான் உங்களை
திட்டவில்லை
சாபமிடவில்லை
இன்றுங்கள் நிலைகண்டு
சந்தோசப்படவுமில்லை
என் இஸ்லாமிய
அன்புச்சகோதரனே!
அவன் எனக்கு
அண்ணன் என்றால்
உனக்கு நாணா.