தண்ணீர்ப் பந்தல், இது விளம்பரதாரர் நிகழ்ச்சி
தேகநீர் வற்றிப் போக
தாகமென்னை வேகமாய் வாட்டியது!
சிறுகுவளை நீருக்கு
அங்குமிங்கும் அலையாய் அலைந்தேன்...
முடிவிலொரு மூலையிலே
பெரும் பலகையொன்றின் எழுத்துக்கள்,
தண்ணீர்ப் பந்தலொன்றின் முகவரியை பறை சாற்ற,
உள்ளக்களிப்பில் விரைந்தோடி இடம் சென்றேன்..
ஓலையில் வேய்ந்த சிறுபந்தல்!
அதன் வாசலிலே கட்டி வைத்த வாழை மரங்கள்!!
பந்தலின் மேல் அசைந்தாடும் உபயதாரர் பெயர் பலகை!
பலகையின் மேலலையும் மின்விளக்கு சரங்கள்!!
எண்ணிக்கொண்டேன்...ஒ இது விளம்பர தர்மம் போலும்....
பொங்கும் நகைப்பினை புறம் தள்ளி,
தாகத்தின் தவம் கலைக்க உள்ளே சென்றால்.....
தண்ணீரும் இல்லை,
அதை சுமக்கும் மண் குடமும் அங்கில்லை..!
***************************************
சுந்தரேசன் புருஷோத்தமன்