சுருங்கிட்ட நம்நட்பை விரித்திடுவோம்
வாயில்லா ஜீவனும் நோக்குகிறது
வந்த வழியை பறந்திட்ட திக்கை !
வண்ணம் மேனியில் இருந்தாலும்
எண்ணம் வானத்தைப் பார்க்கிறது !
சிறகொண்டு பறந்திடும் எமக்கும்
சிரமங்கள் உண்டு வாழ்க்கையில் !
சிரமேற் தாங்கிடும் பாரங்களுண்டு
சிறந்த வாழ்விலையே எங்களுக்கு !
ஆறறிவு கொண்டுள்ள மனிதர்களே
ஆற்றிடா துயர்கள் அடையும்போது
ஐந்தறிவு உயிரனங்கள் நாங்களும்
ஐயமென்ன ஜந்துக்கள் நிலைதானே !
சுதந்திரமாய் பறந்து திரிந்தோம் அன்று
சுத்தமிகு காற்றையும் சுவாசித்தோம் !
விந்தைமிகு விஞ்ஞானமும் வளர்ந்தது
விரட்டப்ப்பட்டோம் விஷவாயு காற்றால் !
மாசும்தூசும் மண்ணில் மட்டுமில்லை
மலைமீதேறி விண்ணையும் எட்டியது !
அலைபேசி இணைக்கிறது உங்களை
அதிர்வலைகள் தாக்குகிறது எங்களை !
வளர்த்திட்ட மனிதனும் மறந்திட்டான்
வளர்ந்திட்ட காரணத்தால் துரத்திட்டான் !
தளர்ந்திட்ட என் இனமோ தடுமாறுகிறது
தழைத்திட வழியின்றி அழிகிறது இன்று !
சிந்தித்திடு மனிதா நீயும் சிறிதேனும்
நிந்திக்கவில்லை நினைத்திடு என்கிறேன் !
நெருங்கிடுவோம் நீயும்நானும் இனியிங்கு
சுருங்கிட்ட நம்நட்பை விரித்திடுவோம் !
பழனி குமார்