கண்ணதாசனுக்கு
முத்தையா-
உன்வரி ஒவ்வொன்றும் முத்தையா
சொத்தையா-
உன்பாடல் கோடம்பாக்க சொத்தையா.
இலக்கியத்தை
இலகுவாக கையாண்ட உன்திறமை
யாருக்கிங்கே வரும்.
வார்த்தைகளைத் தேடிப்பிடித்து
நீ வார்த்த கவியெல்லாம்
ஒரு கோடி பொன்னுக்கு மதிப்பு பெறும் .
உன்வரிகளிலே வள்ளுவன் இருந்தான்
உன்கவிகளிலே கம்பன் சிரித்தான்
கேட்டு ரசித்த பாமரனோ
உணவு மறந்தான் .
கீதை சொன்னாய் -அதையும்
கீர்த்தியாய் சொன்னாய்
வேதம் சொன்னாய் -பலரும்
விளங்கச் சொன்னாய் .
மதுசுகத்தில் தவழ்ந்தாலும்
மன்னவா நீ ஒரு கவிதைச்செண்டு
மனம் கவர் உன்கவி கேட்டு
நாங்களெல்லாம் மலர் சுற்றும்வண்டு.
கண்மூடித் திறப்பதற்குள்
கண்ணதாசனே எங்கு போனாய்
தமிழைத் தவிக்கவிட்டு
தனிமரமாய் ஏன் போனாய்.
கவிதைகளின் கர்த்தாவே
மறுபடியும் நீ பிறக்க வேண்டும்
பாழ்பட்டு கிடக்கும் பாட்டுலகம்
உன்பாட்டாலே சிறக்க வேண்டும்.