உண்மை சுடும்

கேட்டிலும் உண்டோர் உறுதி
வள்ளுவன் குரலில் பகன்றது
நீட்டறிய உதவிய கோலாய்
நட்பின் குணம் அளந்து சொன்னது!!!
உண்மைதனை உரைத்திடத்தான்
ஒரு வார்த்தை போதும் போதும்
பொய்யதனை மெய்ப்பிக்க
ஓராயிரம் கூறிட வேணும்!!!
ஓராயிரம் முறை கூறிய போதும்
பொய் என்பது உண்மையாகாது
ஓர் முறை உரைப்பதினாலே
உண்மை என்றும் பொய்யாகாது!!!
ஒலி எழுப்பி உரைத்துவிட்டால்
பொய் உண்மை என்றாகிடுமோ
மௌனமாய் இருப்பதனால்
உண்மைதான் பொய்யாகிடுமோ???
குருதி கொட்ட துடிப்பது கண்டும்
சாயமென நகைக்கும் கூட்டம்
சாயத்தையும் குருதியாக்கும்
பொய்யான சகலத்தையும் உறுதியாக்கும் !!!
மறைக்கப் பட்டாலும் உண்மை உண்மை
மார் தட்டினாலும் பொய்யது பொய்யே..
உண்மை காலம் கடந்தும் வெல்லும்
பொய் ஒருநாள் வாய் நுரை தள்ளும்!!!
மரணமே நெருங்கினும் உண்மையை போற்று
பொய்க்கரம் சிதையுறும் உண்மை காப்பாற்று
உண்மையாய் வாழ்த்திட வந்திடும் உயர்வு
தன்மையாய் பேசிட தந்திடும் நிறைவு!!!