வேலி மரம்

வரப்புல நிக்க வச்சான்
உறவுகள
வாய் சண்ட போட வச்சான்
நான் அவனுக்கு சொந்தம்னு
பேசி வச்சான்
நாட்டாமைக்காரன் வந்து கல்லு
நாட்டி வச்சான்
இரண்டு பேருமா சேர்ந்து
என்ன முறிச்சான்
என் உசிர எதுக்கு
இவன் பறிச்சான்
களைப்பா வந்தவனுக்கு
இளைப்பாற இடம் கொடுத்தேன்
உழைக்காம சுத்தியவனுக்கு
உட்கார இடம் கொடுத்தேன்
உண்ணாம வந்தவனுக்கு
உ ணவும் நான் கொடுத்தேன்
உசிர மாய்க்க வந்தவனுக்கு
உதவியும் நான் செஞ்சேன்
உறங்காம தவம் செஞ்சு
மழை வரமும் வாங்கிக் கொடுத்தேன்
காதல் செஞ்சவங்களுக்கு
கைமாறு நான் செஞ்சேன்
குடும்ப பிரச்சினைய தீர்க்கையில
நாட்டாமைக்கு குடை புடிச்சேன்
ஊராரு நோயால துடிக்கையில
மருந்துக்கு தோல் கொடுத்தேன்
மண்ண மழ அரிச்சி போகையில
தடுத்து நான் காத்தேன்
புயலு புழுதி வீசயில
ஊரு சாகாம நான் பார்த்தேன்
பருந்து பறந்து திரிகையில
பறவைக் குஞ்ச நான் காத்தேன்
இடி மண்ணுல விழுகையில
தலையில தாங்கி மண்ண நான் காத்தேன்
என் மடியில
சாமிய வாழ வச்சேன்
ஊருக்கொரு அடையாளமா
நான் நின்னேன்
வேலி மரமா நின்னதால
இதுவர நான் வாழ்ந்தேன்
என் மனசறிய தீங்கெதையும்
சாமிக்கும் செய்யல
பூமிக்கும் செய்யல
மனுசனுக்கும் செய்யல
நட்ட நடு பகலில
வெட்டும் போது
எவரும் தடுப்பதில்ல
என் மரணத்திற்கு
கண்ணீர் விட
எவருமே நினைப்பதில்ல
இதுவரை நான் செய்தவைக
எவருக்குமே நினைவில்ல
நான் மீண்டும் முளைத்தால்
கடவுளுக்கு மதிப்பில்லன்னு
நான் வாழ்ந்த இடத்தில
கோயில கட்டுறாங்க
மனிதர்கள் கடவுளுக்காய்
இப்போதெல்லாம்...
நான்காம் தொழில் ( அரசியல்)
கடவுளும் செய்கின்றார்
மனிதர்களோடு சேர்ந்து..!