இலட்சிய பொம்மை
என்னிடம் கொஞ்சம்
களிமண் இருந்தது !
ஒரு பொம்மை செய்ய
ஆசைப்பட்டேன் !
பொம்மை செய்பவர்களின்
உலகத்தில்
சில கருத்துக்கள்
நிலவிவந்தன !
பொம்மை
புன்னகைக்க வேண்டும்
என்றொரு கருத்து !
ஆகவே,
பொம்மைக்கு
புன்னகையை அளித்தேன் !
கண்களில்
உயிர்ப்பு கொண்டதுதான்
பொம்மை
என்றொரு கருத்து !
கொஞ்சம் முயன்றதில்
பொம்மையின்
கண்கள்
உயிர்ப்படைந்தன !
வண்ணமில்லாதது
பொம்மையில்லை
என்றது
ஒரு கருத்து !
சற்றே
மெனக்கெட்டதில்
வண்ணத்தில்
ஜொலித்தது
பொம்மை !
கொஞ்சமாவது
உடைந்து
அழுக்கானால்தான்
அது பொம்மை
எனுமொரு கருத்து !
அவ்வாறே
ஆனது பொம்மையும் !
இப்போது
பொம்மை,
பொம்மை உலகத்தின்
இலட்சிய பொம்மையாக
உருவெடுத்திருந்தது !
ஆனால்,
அது
என் பொம்மையாக
இருக்கவில்லை !