கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன்0o0o0சொ.சாந்தி
=====================================

"சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்"

பாடியது போல் தமிழ் படித்தே இறந்தான் கவிஞன்
இறந்த பின்னும் இன்னுமிங்கு வாழும் கவிஞன்
அவன் சாம்பலிலும் தமிழ் மணந்து வெந்ததல்லவா
கண்ணதாசன் சாகாவரம் பெற்றதமிழ் வேந்தனல்லவா??

கன்னித் தமிழ் கனி ரசத்தை பிழிந்தே கொடுத்தான்
கனிரசத்தின் போதையிலே கிறங்கிட வைத்தான்
கண்ணதாசனவன் பாட்டினிலே மயங்காதோர் இல்லை
தலையசைக்காமல் பாடலையும் ரசித்தோர் இல்லை

அர்த்தமுள்ள இந்து மதம் வாழ்விலக்கணம் பேசும்
வாழ்விலக்கணம் படைத்தவனை இவ்வுலகே பேசும்
அமைதியது வேண்டுமெனில் இந்நூலினைப் படி
படிக்கும்போது திறந்திடுமே சொர்க்க வாசற்படி!!!

காதலையும் கடவுளையும் பாட்டினில் வைத்தான்
செய்யும் கர்மவினை இரகசியத்தை ஏட்டினில் வைத்தான்
எடுக்க எடுக்க எள்ளளவும் குறையா அமுதாம்
அவன் எழுத்தெல்லாம் படிக்க படிக்க திகட்டா சுவையாம்!!!

தத்துவங்கள் புதினம் யாவும் படைத்த மேதாவி - அவன்
வடித்ததெல்லாம் படித்திடுமென் விழிகளுமே தாவி
இயேசு காவியத்தை உலகினுக்கே அளித்த மா கவி
கண்ணதாசனைப் போல் கண்டிடுமோ இனி இப்புவி!!!

===========================================================

திரு கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாளுக்கான கவி அரங்கிற்கு வர கூறி குருஞ் செய்தி மூலமாக அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். கண்ணதாசன் அவர்களைப் பற்றிய கவிதையும் எழுதி வர பணித்திருந்தார்கள். கடந்த வெள்ளிக் கிழமை (27-06-2014)அன்று நடந்த கவி அரங்கில் அனைத்து தமிழ் ஆன்றோர்களின் முன்பாக இந்த கவிதையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தமை குறித்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வாசித்து முடித்தவுடன் ஆன்றோர்களில் பாராட்டும் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்களிடம் இதனை பகிர்வதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

மேலும் ஒரு பகிர்வு. நான் இங்கு தளத்தினில் பதிந்த கவிதை "வாழ்வைத் தொலைத்தவர்கள்" கவிதை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தமிழ் மாத(ஜூன்) இதழ் "தமிழ் லெமுரியா" என்கிற பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது. இது மின் இதழாக தமிழ் லெமுரியா இணைய தளத்திலும் உள்ளது என்பதனையும் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி. இந்த அளவிற்கு என் கவிதை வெளிவந்திருப்பதற்கு இத்தளமும், இங்குள்ள கவிதைகளை தொகுத்து புதுவையில் வெளியிட்ட அன்புமிகு திரு அகன் அய்யா அவர்களையே சாரும். அவர் புதுவையில் வெளியிட்ட புத்தகத்திலிருந்தே என் கவிதை எடுத்துக் கொள்ளப்பட்டு மேற் சொன்ன பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது என்பதை கேட்டறிந்து கொண்டேன். இத்தளத்தினருக்கும், அகன் அய்யா அவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழ் லெமுரியா பத்திரிக்கை ஆசிரியருக்கும் என் நன்றிகள்.

தோழமை நெஞ்சங்களே நீங்களும் இங்கு தொடர்ந்து எழுதுங்கள். உங்களது படைப்புகளும் என்றாவது ஓர்நாள் அனைவரும் அறிய உலா வரும் என்பது திண்ணம்.

அன்புடன்,
சொ. சாந்தி

எழுதியவர் : சொ. சாந்தி (1-Jul-14, 9:08 am)
பார்வை : 1435

மேலே