அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர
"அரசுப் பள்ளியில் படித்தவர்களெல்லாம் கை தூக்குங்கள்"- என்று கல்லூரியில் முதலாம் வருடம் முதல் நாள் கேட்ட வார்த்தைகள், நிறைய பேரிடம் முகத்தை மாற்றி யோசிக்க வைத்தது. எனக்கு எவ்வித தயக்கமோ, தடுமாற்றமோ இல்லை. எவ்வித புரட்சிகரமான சிந்தனையையும், எனக்கு இருப்பதற்கான சூழலை அரசுப் பள்ளி விதைக்கவில்லையே தவிர, எந்த சூழலிலும் படித்த பள்ளி, அரசுப் பள்ளி என்பதற்காக அதை நிராகரிக்கும் மனப்பாங்கையும் விதைக்கவில்லை. எங்கும் எப்போதும் நான் அரசுப் பள்ளியில் படித்ததை பெருமையாகவே சொல்லிக் கொண்டிருக்கிறேன். கிணற்றில் தத்தளிக்கும் நிலையில், வந்து விழும் விழுதை கெட்டியாக பிடித்து முன்னேறி விடும் என்றே இன்றும் நம்புகிறேன். நிறைய அப்துல் கலாம்களை, நிறைய அண்ணா துரைகளை, இன்னும் நிறைய அதிகாரிகளை, அரசு அலுவலர்களை, அரசுப் பள்ளிகளே தந்திருக்கின்றன. இருந்த போதிலும், அரசுப் பள்ளிகளின் தரம் என்று யோசிக்கையில், பார்க்கையில், சற்று, பின்னோக்கி நின்று விடத்தான் தீர்மானிக்கிறது யோசனைக் கால்கள்.
எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாமல் போவதைப் போல, கரும்பலகை முன்னால் நிற்கும் ஆசிரியர்க்கும், கடைசி இருக்கையில், குறும்பு சிரிப்பில் பல் காட்டும், சேரி என்றழைக்கப்படும் இடத்திலிருந்து வரும் முதல் தலை முறை மாணவனுக்கும் இடையே, ரயில் பாதையாய் ஒரு இடைவெளி நீண்டு கிடப்பதாகவே, ஒரு தோற்றம் வகுப்பறையில் இல்லாத ஜன்னலைத் தேடுகிறது. தரம் என்ற சொல், கட்டிடங்களையும், கரும்பலகையையும் மட்டும் சார்ந்ததில்லை. நாளைய சரித்திரத்தில் சாதிக்க போகின்றவர்களின் ஆழ் மன விதைப்பிலும், சார்ந்ததே.....
புழுவை லாவகமாக பிடுங்கி போகும் மீன்களின் சாயலில் இன்றைய மாணவ சமூகம் இருக்கையில், கண்டிப்பாக அறிவு சார்ந்த தூண்டில் கொண்ட ஆசிரியர்களே தரமான வெளிப்பாடு. கண் காட்டும் ஆசிரியர்களும், தொடுதல், படுதல் ஆசிரியைகளும், ஆங்காங்கே இருப்பதும், பாலியல் கல்வியை மாற்றி யோசித்து கற்றுக் கொடுக்க முயற்சிப்பதும் தரம் தாழச் செய்யும் தரித்திர போக்கே....
ஊர் ரெண்டு பட்டாலே கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான். இங்கே நான்காய், பத்தாய், நூறாய் பிரிந்து கிடக்கும் ஊரில், கூத்தாடிகளின் கொண்டாட்டம், இண்டு இடுக்குகளில், சந்து பொந்துகளில், கையூட்டின் விஸ்வரூபமாக எல்லாரும் சேர்ந்து எல்லாமாய் செய்து உருவாக்கிய, சில நேரங்களில் பலி கூடமாகவும் உருமாறும் சக்தி வாய்ந்த, முகமூடிகளற்ற கொள்ளைக் கூட்டங்களின் பரிணாம மாற்றாய், தனியார் பள்ளிகலாய் வளர்ந்து நிற்கின்றன. சீட்டு நிறுவனம் நடத்தினார்கள். வேட்டு நிறுவனம் நடத்தினார்கள். இன்று பள்ளி நிறுவனம் நடத்துகிறார்கள். பின்னால் பிரைவேட் லிமிட்டட் மட்டுமே சேர்க்க வேண்டும். அதையும் தரம் என்ற பொருள் பட காலம் கூட்டிக் கொள்ளும்.
கழிப்பறை சரியில்லை, சரியாய் இருந்தால் தண்ணீர் இல்லை, இரண்டும் இருந்தால் சுத்தம் செய்யும் ஆளில்லை. சில பள்ளிகளில் கழிப்பறையே இல்லை, சில பள்ளிகளில் கழிப்பறையே வகுப்பறை. மைதானம் இல்லை, மரம் இல்லை, இருந்தாலும் பராமரிப்பு இல்லை, பரிதவித்து நிற்கும் சில வகுப்புகளில் ஓடுகள் இல்லை. என்ன செய்யும் மத்தியதர வர்க்கத்தின் மலையளவு ஆசை. தரமில்லை என்று குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடி, ஏதாவது ஒரு சந்து பொந்துக்குள், திட்டு வாங்கி, கைகட்டி, கூனி குறுகி அடைக்கலம் புகுந்து கொள்கிறது, இல்லையில் இருத்தல் முக்கியம் என்ற தத்துவத்தோடு....ஏழை மக்களுக்கு மட்டும் தான் அரசுப் பள்ளிகள் என்றொரு பழைய சித்தாந்தம் மட்டும் புதியதாகவே இன்றும் செருப்பில்லாமல் பள்ளி செல்கிறது.
தனியார் பள்ளிகளில் படித்து நூறு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், அரசுப் பள்ளியில் படித்த எண்பது மதிப்பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். ஆங்கிலத்தை அவசியத்துக்கு பேச கற்றுக் கொடுப்பதில் அரசுப் பள்ளிகள், முயற்சிகள் எடுக்க வேண்டும்...அரசும் இலவசங்களைத் தொலைக்காட்சி பெட்டியாக கொடுப்பதற்கு பதிலாக படிப்பாக தர வேண்டும். பண்பட்ட நூல்களை(பாடப் புத்தகங்கள் தவிர) படிக்க தர வேண்டும்... படித்தவற்றை விவாதிக்க கற்றுத் தர வேண்டும். கணினி அறிவை எளிய அறிவியலாய் விளக்க வேண்டும். சனி ஞாயிறு கண்டிப்பாக விடுமுறை தர வேண்டும். முக்கியமாக 12ம் வகுப்பை 11ம் வகுப்பிலேயே படிக்கும் முட்டாள்தனத்தை கை விட வேண்டும். கூவி கூவி கோழிக் குஞ்சு விற்பது போல பள்ளிகளை விற்கும் தனியார் பள்ளிகளின் கூட்டம், பன்றிக் கூட்டங்களாய் பெருகுவதை, எதையும் வாங்காமல் அரசு குறைக்க வேண்டும்....
அரசுப் பள்ளிகளை, நவநாகரீக கட்டிடங்களாய் மாற்ற வேண்டும். சீருடை வண்ணத்தை மாற்றலாம். எத்தனை தலைமுறைக்கு வெள்ளை சட்டையையே அணிவது...? வண்ண மாற்றம், என்ன மாற்றத்துக்கும் வழி கோரும். சரியான தரமான உடற்பயிற்சி கூடங்கள் இருப்பது உள்ளங்களை தூய்மையாக்கும் உந்து சக்தியை வளர்க்கும். சங்க இலக்கியத்தோடு நின்று விடாமல உலக இலக்கியத்தையும் காட்ட வேண்டும். செயல் முறைக் கல்வி மிகவும் அவசியம். வெறுமனே, படித்து, விழுங்கி, வாந்தியெடுக்கும் தனியார் பள்ளிகளின் தலையாய உத்திகளில் ஒன்றை தலை முழுக வேண்டும். மாணவி, மாணவனின் எந்தக் கேள்வியையும் தட்டாத ஆசிரியர் வேண்டும். பதில் தெரியாத ஆசிரியரை பக்குவமாய் எடுத்து சொல்லி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
பெற்றோர்களும், தனியார் மய மாயங்களில் சிக்கிய காற்றுப் புழுதிகளாய் தங்களை நினைத்து, சந்தோஷம் காணும் அடிமைத் தன சுய வடிகாலில் இருந்து தங்களை வெளிக் கொணர வேண்டும். படிப்பது, அமெரிக்கா செல்ல அல்ல, பக்குவப்பட என்பதை உணர வேண்டும். தம் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்..."கொசுக்கடி..... ஆதலால் வீட்டைக் கொளுத்துகிறேன்" என்பது போன்றது, "தரம் இல்லை" என்று தனியார் பள்ளிகளுக்கு செல்வது.... இது நமது நாடு. நமக்கான நாடு. அரசுப் பள்ளியில் படிப்பதே கெளரவம். தரம் இல்லை என்றால் தட்டிக் கேளுங்கள். அதற்கு ஒற்றுமை என்ற படிப்பினை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும். தரமான பார்களை அரசால் உருவாக்க முடியும் என்றால் தரமான பள்ளிகளையும் உருவாக்க முடியும். முடியாது என்று நாமாகவே நமக்குள்ளாகவே தீர்மானித்து இக்கரைக்கு அக்கரை என்று தனியார் பள்ளிகளின் காலில் விழுவது, இன்னொரு அடிமை சமூகத்தை விதைப்பதற்கான இயந்திர வேளாண்மையாகும் ...
சரி, அதற்காக தனியார் பள்ளிகளே வேண்டாமா என்றொரு கேள்வி வரத்தான் செய்கிறது.... அட, ஆழ்ந்து யோசிக்கையில் சாராயக் கடைகளை அரசே எடுத்து ஒரு நிறுவனமாக நடத்த முடியுமானால், பள்ளிகளையும் முழுக்க முழுக்க அரசே நடத்த முடியும். மேல்தட்டு, கீழ்தட்டு, அந்தஸ்து வலியவன், வறியவன், என நாளைய சமூகம் இன்னும் மோசமாக பிரிந்து கிடக்காமல் இருக்க வேண்டும் எனில், எல்லாருக்கும் ஒரே கல்வி, தரமான கல்வி, இலவசக் கல்வி என்று அரசுப் பள்ளிகளின் கண்களில் திறக்கும் அறிவின் சுடரே அவற்றை முன்னெடுத்துச் செல்லும். அதன் பிறகு கூறுவோம்...."தகுதி உள்ளவைகள் தப்பிப் பிழைக்கும் என்று"
பள்ளிக் கூடம் அறிவைத் தர வேண்டுமே தவிர ஆணவத்தை அல்ல. அரசுப் பள்ளியில் படிப்பது தாழ்வு மனப்பான்மையை விதைக்கிறது என்ற கூற்றை உடைக்கும் அதே சமயம், தனியார் பள்ளியில் படிப்பதால் பல போது எழும் எல்லாம் தெரிந்த மேதாவித் தனம் போல் இருக்கும் பாவனையையும் உடைக்க வேண்டும் என்பதே சித்தாந்தம்...தத்துவங்கள் பசி போக்காத பொழுதுகளில், ஒரு காமராஜர் ஏதாவது ஒரு அரசுப் பள்ளியில் இருந்தே வெளி வருவார், தரமான அரசியலோடு.....
தரம் உயர உயர மாணவர் சேர்க்கை உயரும்... பின் எந்த விளம்பரங்களும் செல்லுபடியாகாது....
கவிஜி