எது வளர்ச்சி - நிலத்தை விற்று நீர் வாங்கி
ஏற்றம் இழுத்த நிலப்பரப்பு,
நாற்றங் காலில் நெல்விதைப்பு,
சேற்றில் மிதித்த கால்பதிப்பு,
நெற்றாய்ப் போனது புல்விரிப்பு !
பாத்திக ளோரம் நீரிறைத்து,
பூத்திருக் குஞ்சிறு களைபறித்து,
தோத்திரம்பாடிப் பயிர்வளர்த்து,
காத்தது போனது துருப்பிடித்து !
நன்செய் நிலமது நெல்விளைக்க,
புன்செய் பூமியில் தினைமணக்க,
தன்செயல் அதுவெனத் தானிருக்க,
வன்செயல் செய்தோம் மண்மறக்க !
குருவிக ளடைந்த மரமழித்து,
அருவிக ளொடுங்க மண்ணழித்து,
பருவக் கணக்கையும் மறக்கடித்து,
பரிதியைப் பெற்றோம் கண்ணழித்து !
ஊற்றை விற்றோம் உமிழ்வாங்க !
சொற்றை விற்றோம் களிவாங்க !
ஆட்டை விற்றோம் கிடைவாங்க !
அதையே வளர்ச்சி என்போங்க !