கிருமி கிருமி கிருமி பகுதி- 3

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
கிருமி கிருமி கிருமி பாகம் மூன்றில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்கிறேன். அறிவியல் விந்தைகளை அனைவருக்கும் எளிய மொழியில் எடுத்துச்செல்வதே இந்த கட்டுரைகளின் நோக்கம். முந்தைய பதிவுகளில் நுண்கிருமிகளை பற்றிய பல வியப்பூட்டும் செய்திகளை கண்டோம். பல லட்சம் கிருமி வகைகள் இருந்தாலும், நோய் உண்டாகும் கிருமிகள் அவற்றில் 5 சதவீதத்திற்கும் குறைவானவையே என முன்பே கண்டோம். இன்று நோய் கிருமிகளைப் பற்றிய சில வியப்பூட்டும் விடயங்களைக் காண்போம். நாம் எல்லோரும் எதாவது ஒரு சூழலில் நோய்வாய்ப்பட்டிருப்போம். சிறு இருமலில் இருந்து, டைபாய்ட் வரை, அல்லது வெளிக்கடைகளில் சாப்பிட்டுவிட்டு வந்து ஓரிரு நாள் உடலுக்கு முடியாது போகும். சில நேரங்களில் குடிநீரால் கூட நமக்கு சளியோ காய்ச்சலோ உண்டாவது உண்டு!!!
இதெல்லாம் நோய்க்கிருமிகளின் அலகிலாவிளையாட்டே!!! உலக வரலாற்றினை நீங்கள் புரட்டிப்பார்த்தால் இதை போல பல திருவிளையாடல்களை நுண்கிருமிகள் நிகழ்த்தியுள்ளன. இவ்வளவு ஏன்... மாவீரன் அலெக்சாண்டர் கூட நோய் தொற்றினால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உலக வரலாற்றில் மக்கள் தொகையினை குறைத்த பெரும் பெருமைகளில் பலது நுண்கிருமிகளையே சாரும்!!! 15ஆம் நுற்றாண்டுகளில் பெரியம்மை வந்து இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா!!! வேரியோலா (variola) என்னும் வைரஸ் கிருமியினால் உண்டாக்கப்படும் பெரியம்மை நோய் 1977களில் தான் ஒரு முடிவுக்கு வந்தது. எட்வார்ட் ஜென்னர் என்னும் மிகப்பெரும் மகானுபாவர் தான் இந்த வைரஸ்களுக்கு தடுப்பு மருந்து 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடித்தவர். அப்படியிருந்தும் இந்த நோய் 1960கள் வரை பலரை விழுங்கிவிட்டது. 1979ஆம் ஆண்டு தான் உலக சுகாதார மையம் இந்த நோய்த்தொற்று இல்லை என்று பிரகடனப்படுத்தியது.
பின்னர் 1918ல் H1N1 இன்ப்லுஎன்சா என்னும் வரை தோற்றும் மிகப்பெரும் அழிவினை உண்டாகியது. சுமார் கோடிக்கணக்கான மக்கள் இந்த வைரசினால் மடிந்தனர். மனித வரலாற்றில் கிருமிகளின் பங்கு அளப்பரியது. இதைப்போலவே ப்ளாக் நோய், மலேரியா, காசம், காலரா, எய்ட்ஸ், முதலியவைகள் மிகப்பெரும் மனிதச் சேதம் செய்துள்ளன. கிருமிகள் மட்டுமில்லையென்றால் பூபாரம் மென்மேலும் அதிகரித்துப்போயிருக்கும்.
சரி இந்த கிருமிகள் எப்படி நமக்கு நோய் உண்டாக்குகின்றன???
பொதுவாக ஒரு நோய்க்கிருமி உடலில் உடனே நோய் உண்டாக்கிவிடாது. நோயிலிருந்து குணமாவது எவ்வளவு கடினமோ, அதை விடக்கடினம் நம் உடலில் நோய் உண்டாவது, கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதா??? அனால் இது உண்மை. நோய் ஏற்படுவதென்பது ஒரு தொற்றுக்கிருமி நம்மை தொற்றுவதால் மட்டும் ஏற்படுவதல்ல.பலர் நினைப்பது போல், நோய் கிருமி நோயாளிகளின் மீது மட்டும் இருப்பதில்லை. நோய் கிருமிகள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. பலவகையான நுன்கிருமிகளுடன் அவைகளும் காற்றினிலும், உணவிலும், தண்ணீரிலும் இருக்கின்றன. ஆனால் நோய் ஏற்படுவதேன்பது ஒரு கிருமி மட்டுமல்லாது, நம்முடைய நோய் எதிர்ப்புத்திறன், நம்முடைய மரபணுக் கூறுகள், கிருமிகளுடைய மரபணு கூறுகள் (இந்த மரபணு சமாச்சாரங்களெல்லாம் பிற்பாடு சற்று விரிவாக காண்போம்!!), நுண்கிருமியின் உற்பத்தி திறன், நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள், மேலும் நுன்கிருமியில் உள்ள நோய் உண்டாக்கும் மூலக்கூறுகள் போன்ற பல விடயங்கள் அடங்கியுள்ளன. அதைப் போலவே கிருமியானது அதற்குண்டான இடத்தினில் இருந்தால் தான் நோய் ஏற்படுத்த முடியும். சால்மோனெல்லா (Salmonella) ஷிஜெல்லா (Shigella) என்னும் கிருமி வகைகள் வயிற்று உபாதைகள் உண்டாக்குபவை. இதில் சால்மோனெல்லா டைபாய்ட் காய்ச்சல் உண்டாகக் கூடியது. மைகொபேக்டிரியம் (Mycobacterium) என்னும் நுண்கிருமி வகைகளே காசநோய், தொழுநோய் போன்றவை உண்டாக்குகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அடையாளம் இருப்பது போல நுண்கிருமிகளுக்கும் தனித்தன்மைகள் உண்டு. உதாரணமாக சால்மோனெல்லா எப்போதும் வயிறு சார்ந்த உபதைகள் உண்டாக்கும், இந்த சால்மோனெல்லா நுரையீரலில் நோய் ஏற்படுத்தாது. அதே போல மைகொபேக்டிரியம் டுபர்கிலோசிஸ் (Mycobacterium tubeculosis) என்னும் காசநோய் உண்டாக்கும் கிருமியால் வயிற்றில் எந்த உபாதையும் உண்டாக முடியாது. இவைகள் நுரையீரலை மட்டுமே தாக்கும், சில நேரங்களில் உடலின் வேறு பகுதிகளை தாக்கும். மேலும் ஒவ்வொரு கிருமியும் நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மூலக்கூறுகளை ஒவ்வொரு வகையில் சமாளிக்கின்றன. நோய் என்பது நம்மைப்பொறுத்தவரை உடலில் ஏற்படும் பிரச்னை, உடலால் சரிவர இயங்கமுடியா நிலை!!! ஆனால் நோய் என்பது கிருமிகளுக்கும்,நமது உடலுக்கும் நடக்கும் ஒரு மூலக்கூறு யுத்தம் என்றே சொல்லவேண்டும். அதனால் தான் மருத்துவர்கள் ஒவ்வொரு வகையான நோய்க்கும் நம்மிடம் ஒவ்வொரு வகையான மருத்துவ மாதிரிகளை (clinical samples) சேகரிக்கின்றனர். இன்னும் கிருமிகளின் மரபணு சார்ந்த செயல்பாடுகள் நமக்கு மேலும் ஆச்சர்யம் அளிப்பவை. சரி நண்பர்களே... இன்னும் பல சுவாரசியமான தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!!! (படித்துவிட்டு தங்களது மேலான கருத்துக்களை பதியவும்)- சௌந்தர்