விளம்பரம் அல்ல விவரித்தேன் என் நிலையை

இதயமும் குளிர்ந்த இனியமாலை
இன்பமுடன் ரசிக்க அமர்ந்தநேரம்
இனிதாய் வந்தன நினைவுகள்பல !
ஊற்றாய் உருவெடுத்தது உள்ளத்தில்
ஊன்றிய உண்மைகள் நெஞ்சத்தில்
உலவிய நிகழ்வுகள் இதயத்தில் !
பிறந்ததை நினைத்து பெருமையே
வளர்ந்த காலமும் வசந்தபொழுதே
வாழும் நிகழ்காலமோ போக்கிலே !
துயர்நிகழ்வுகள் துளைத்தன என்னை
துன்பம் தந்த வேளைகளும் வலித்தன
தூங்காத நேரங்களும் நினைவூட்டின !
உழைத்திட்ட காலங்கள் கண்களிலே
உடனிருந்தோர் உவகை பலவழியில்
உயரமும் சென்றனர் பலர் வாழ்விலே !
உதவிபெற்ற சிலரோ உதறிவிட்டனர்
உதவியென வந்தோர் பலர் மறந்தனர்
உலகத்தில் சிலர் என்னை துறந்தனர் !
பொன்னான மனிதர்கள் மறைந்தனர்
பொற்காலமோ கடந்திட்ட காலங்கள்
பொங்கி வருகிறது பல நினைவுகள் !
உறவுகள்பல உணர்வையே இழந்தனர்
உண்மையை மறந்து உறங்குகின்றனர்
உறுத்திடும் உள்ளங்கள் மறுக்காதுஇதை !
பயன்பெறவே பலரும் நண்பர்களாயினர்
பயனாளிகள் பலர் இன்று பகைவராயினர்
பயணிக்கிறேன் பாதையிலா பாதையிலே !
விருப்ப ஓய்வில்தான் ஓய்வுபெற்றேன்
விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டினேன்
விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் ஓய்வுபெற்றது !
பணியில் உள்ளபோதும் பிணிகள்தான்
பணிகளே இல்லாதஇன்றும் பிணிதான்
பணியே படுத்து படுத்து எழுவதுதான் !
எழுதிடும் பழக்கம் என்றுமே உண்டு
எழுத்தால் வில்லங்கம் வந்ததுமுண்டு
எழுத்தால் எழுச்சியை பெற்றதுமுண்டு !
எழுத்து தளத்தால் காலமும் கழியுது
எண்ணற்ற நட்புகள் நாளும் மலருது
எஞ்சிடும் காலமும் எனக்கு களமானது !
விருதுகள் பெறுவது அகத்திற்கு விருந்தே
விழாமல் இருந்திட உதவிடும் மருந்தே
விளைந்திடும் நன்றே வித்தாய் இருந்தே !
தகுதியும் உண்டா எனக்கு அறியேன்நான்
தாழ்த்திடவில்லை தரவரிசையை சொன்னேன்
தாயுள்ளங்கள் தனயனுக்கு அளிப்பதையே !
விளம்பரமும் அல்ல சுயபுராணமும் அல்ல
விளக்கிட்டேன் என் நிலையை அறிந்திடவே
விவரித்தேன் என் உள்ளத்தினை புரிந்திடவே !
பழனி குமார்