மீண்டும் வானம் பாடி

கூண்டோடு உறங்காத உணர்வையெல்லாம்
குவித்துந்தன் சிறகதனில் சுமந்து வானில்
நீண்டோடும் முகிலுடைத்துத் தாகம்தீர
நெருப்புமழை பருகிட வா வானம்பாடி
மானமெனும் பானையிலே வாழ்வை ஆக்கும்
மறத்தமிழர் வரலாற்றை மறந்து நாளும்
ஊனமுற்ற உணர்வுடனே உழலும் மாந்தர்
உள்ளமதை மாற்றிடுவாய் புரட்சிக் கானம்பாடி
எளியவர்கள் ஏதிலிகள் வலியை உண்டு
ஏப்பம் விடும் ஏகாதிபத்தியத்தின்
வலிய கையை உடைத்தெறிந்து விறகாயாக்க
வழியறிந்து விதியை வெல்லு நாளும்பாடி
முண்டாசுக் கவிஞனும் முன்னோரும் சொன்ன
மூவுலகின் சக்தியாம் தாய்க்குலத்தைப் போற்றி
வண்டாடும் தமிழ்வனத்தின் வாசம் நீங்கா
பண்பாட்டைப் பண்பாடு மீண்டும் வானம்பாடி