அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர....

. குற்றமற்ற சொற்களை ஆராய்வதில் வல்லவரிடத்தில் பல நூல்களையும் கற்று அறிந்தவரின் கல்வி நன்கு விளங்கும் என்பது கல்வியின் தரத்தையும் விளக்கும் குறளாகும்.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லா ரகத்து.


எனும் அக்குறள் வெண்பா கல்வி கற்றவர், மற்றும் கல்வி ஆராய்வாளர் ஆகிய இருவரைப்பற்றியும் புகல்வதால் இது தரம் உயர்ந்த கல்வியைப் பற்றி போதிப்பது எனக் கொள்ளலாம். கல்வியின் தரமுயர்த்துதல் எனும் விவாதம் மட்டுமே எத்தனை விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்பது பெரும்பான்மையான கல்வியாளர்கே தெரியாமல் போகலாம். ஏனெனில், தரமுயர்த்துதல் என்றாலே, ‘அது வளர்ச்சியின் சின்னம் என்றோ அல்லது வெறும் வெட்டிப் பேச்சு என்றோ பழித்துக் கூறி விடாமல், பள்ளிக் கல்வி சீர்திருத்ததில் அகில உலகமெங்கிலும் தரமுயர்த்தம் ஒரு இயக்கமாக உருமாறி செயல்பட ஆரம்பித்து விட்டது.

ஆயினும் இந்தியாவில் “பட்டினியும் சத்துணவுக் குறைபாடும்” எனும் தலைப்பில் ‘ஹங்கமா” எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையினை முன்னாள் பாரதப் பிரதமர் கண்களில் கண்ணீர் வடிய வெளியிட்டார். இதன்படி இங்கு உள்ள 120 கோடி சனத்தொகையில், 45 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் நிலையில், கல்வி என்பது ஒரு சொகுசு பொருளாகவே உள்லளது என்பதை மிக மிக மன வருத்தத்துடன் சுட்டிக் காட்டினார்.

கிளேசர் மற்றும் லின் எனும் ஆராய்ச்சி அறிஞர்கள் கல்வியப் பற்றிக் கூறுகையில்,” நாட்டின் கல்விச் சீர்திருத்ததை முடுக்கி விட நினைக்கும்போது கடந்த பத்தாண்டுகளை, கல்வித் தரம் குறித்து அகில உலக ஊடங்கள் ஒருமித்த மனதுடன் வலியுறுத்தியதன் விளைவு இது என சந்தேகமின்றி அடையாளம் காட்டலாம். இதற்காக பாடுபட்ட கிரியா ஊக்கியாக, அரசும்,மாநில சட்ட மன்ற உறுப்பினர்களும், ஆட்சிப் பொறுப்பாளர்களும், கல்வியியல் அறிஞர்களும் ஆவர்” எனக் கூறுகின்றனர்.

தமிழகத்தில் கல்வியின் வரலாற்றை நாம் ஒருமுறை நினைவு படுத்திப் பார்த்தால் மட்டுமே
கல்வி கற்றோர் விபரம், கல்வியின் தரம் எப்படி இருந்தது, அதனை எப்படி உயர்த்த வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க இயலும். இந்தியா முழுவதும், ஆங்கிலேயர் ஆட்சிக்கு வருமுன்னர் கல்வி என்பது தனியாரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவமாக இருந்து வந்துள்ளது. இங்கு குருகுல முறையில் கல்வி போதிக்கப்பட்டு வந்துள்ளது,. 1813 ஆம் ஆண்டு வரை இந்தியாவை அப்போது ஆட்சி செய்து வந்த கிழக்கு இந்தியக் கம்பெனியும் இந்தியரின் கல்வியை முன்னேற்ற எந்த வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆங்கில கவர்னர் தாமஸ் மன்றோ 1826 ஆம் ஆண்டில் போர்டு ஆஃப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்சன்ஸ் என்பதை நிறுவினார். அதனைத் தொடர்ந்து ”வூட்ஸ் டெஸ்பாட்ச்” எனும் ஆய்வுக் கட்டுரை 1854 ஆம் ஆண்டில் அமைத்த அடிப்படை ஆதாரமே இந்தியாவில் கல்வி அமைப்பு வளர்ச்சி அடைந்திட வித்திட்ட ஒன்றாகும்.

வூட்ஸ் டெஸ்பாட்சின் அடிப்படையில் சென்னை மாகாண அரசு பொதுக் கல்வி துறையைத் தோற்றுவித்து அதற்கான விதிகள், ஒழுங்கு முறைகளை 1855 ஆம் ஆண்டில் வரையறுத்து வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் இயங்கி வந்த தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களாக மாற்றப்பட்டன.

”தல போர்டுகள் சட்டம் 1871” இன்படி தல போர்டுகள் என்ற பெயரில் கல்வி வாரியங்கள் தோற்றுவிக்கப்பட்டன. பள்ளிகள் துவக்கும் அதிகாரமும் அவற்றை அங்கீகரிக்கும் அதிகாரமும் இவற்றிற்கு வழங்கப்பட்டன. 1920 ஆம் ஆண்டில் அடிப்படைக் கல்விச் சட்டம் இயற்றப்பட்டு, மாவட்ட வாரியங்களிலிருந்து தாலுக்கா வாரியங்கட்கு பள்ளி அங்கீகரிக்கும் அதிகாரம் மாற்றப்பட்டது.. இது மீளவும் 1934 ல் மாவட்ட போர்டுகளுக்கு வழங்கப்பட்டது. இந்த போர்டுகளும் 1930 இல் நீக்கப்பட்டு, கல்வித்துறைக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் மீள கொடுக்கப் பட்டது. பள்ளிகளின் வளர்ச்சியையும் பள்ளிக் கல்வி வளர்சசியையும் காணுங்கால், முதன் முதலாக தமிழகத்தில் 1841 ஆம் ஆண்டில் முதல் உயர் நிலைப் பள்ளி துவக்கப்பட்டு 1849 இல் பெண்களுக்கான உயர் நிலைப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 1911 ஆம் ஆண்டுதான் முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது 1956 ஆம் ஆண்டில் மதிய உணவுத் திட்டம் துவக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு, 1982 இல் புரட்சித் தலைவரின் சத்துணவுத் திட்டம் அமுலாக்கப்பட்டது. இவ்வாறு படிப்படியாக வளர்ந்து வந்த தமிழக கல்வி வளர்ச்சி ஏதும் அடையாமல் ஒரு கால கட்டத்தில் பள்ளியை விட்டுச் செல்வோரின் எண்ணிக்கை உயர்ந்து கல்வித் தரமும் சரிந்து போனது. இதற்கான காரணங்களை ஆராய்ந்த போது கல்வி கற்க மாணவர் முன் வராமைக்குக் காரணம் அவர்களது பொருளாதார நிலை என்பது கண்டறியப்பட்டு, இதனை சரி செய்ய கல்வி முறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டிய அவசியத்தை அடுத்து அடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் உணர்ந்து செயல்படத் தொடங்கின. இந்த சரிவு தமிழகத்தில் மட்டுமில்லாமல் அனைத்து இந்திய அளவிலும் காணப்பட்டது. ஆசிரியர்களின் மனப்பாங்கும், அவர்களதுமெத்தனப் போக்கும் கூட இதற்கு ஒரு வழியில் காரணமாக அமைந்து விட்டது. முதன் முதலில் கல்வி கற்ற ஆசிரியர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆகியோர் வேறு வேலை கிடைக்காமல் ஆசிரியப்பணி செய்ய வந்து விட்டு பின்னர் அதில் ஈடுபாடு இல்லாமல் போய், சரியாக பாடம் நடத்தாதது, பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது, உள்ளூர் பணக்காரர் என்பதால், பிற ஆசிரியர்கட்கு கடன் கொடுப்பது, கொடுத்த கடனை வசூலிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கல்வியின் மீது வெறுப்பு மட்டுமே ஏற்பட்டதுடன், அத்தகைய ஆசிரியர்களை தவிர்க்க விரும்பியே பள்ளிய விட்டு விலகி ஓடிய மாணவர்களின் எண்ணிக்கை உயர ஆரம்பித்து விட்டது.
இதற்கெல்லாம் தீர்வான முடிவாக, கல்வியை மலிவானதாக்குதல், இலவசமாக்குதல், ஆசிரியர் தகுதியை மேம்படுத்துதல் போன்றவை கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி தரமும் மேம்படைய வாய்ப்பளிக்கும் என்பது பெற்றோர், ஆசிரியர் என அனைத்து சமூகத்தினராலும் உணரப்பட்டது.

’எதைப் போதிக்கலாம், எதை சாதிக்கலாம்’ எனக் கண்டு பிடிப்பதே தர மேம்பாட்டு பணியில் முதற்கட்டப் பணியாயின் கல்வியின் தரம் முதலில் எப்படி இருந்தது எப்படி கீழே விழுந்தது, மீளவும் அதனை மேலே உயர்த்துவதெப்படி என்பதே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தரம் உயர்த்தல் ஒரு பேரியக்கமாக மாறி விட்டுள்ளது.

தமிழகத்தில், கல்வி கற்றோரின் வீதம் சராசரியாக 73.47 விழுக்காடு எனின் அதில் ஆண்கள் 82.33% பெண்கள் 64.55% ஆவர். தமிழகத்தில் உள்ள அரசினர் பள்ளிகளின் விவரமும் எண்ணிக்கையும், மாணவர் சேர்க்கை விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஆகும்.

அ. முதல் நிலைப் பள்ளிகள் 1529- 1.73 இலட்சம் மாணவர்கள்
ஆ. நடுநிலைப் பள்ளிகள் 390- 0.92 இலட்சம் மாணவர்கள்
இ. உயர் நிலைப் பள்ளிகள் 2016 – 8.33 இலட்சம் மாணவர்கள்
ஈ. மேல் நிலைப் பள்ளிகள். 1691 -18.89 இலட்சம் மாணவர்கள்

மாணவர் சேர்க்கை எப்படி உள்ளது என்பதை பள்ளிகள் வாரியாக ஒரு பார்வையிடும்போது

அரசு பள்ளிகள் -- - - 5631
முனிசிபல் மாநகராட்சி - 1552
பஞ்சாயத்து யூனியன் - 27364
தனியார் - 8964
நர்சரி மற்றும் பிரைமரி - 4622
ஆங்கிலோ இந்தியன் - 41
மெட்ரிகுலேஷன் - 3474
மைய அரசு பாடதிட்டம் - 159
மொத்தம் - 51807 –மாணவர் சேர்க்கை 130.20 இலட்சம்


தமிழகத்தைப் பொறுத்தவரை, தரம் உயர்த்திடவும், மாணவர் சேர்க்கையை அதிகரித்திடவும் தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை சரிவர அமல்படுத்தினாலேயே எல்லாம் வெற்றியில் முடியும். இத்திட்டங்கள் தொடங்கப்பட்ட 2010-11இல் பள்ளி செல்லும் வயதுடைய பிள்ளைகள் 1,00.80,179 பேரில் 64,20,748 ஆறிலிருந்து 10 வயதிற்கு உட்பட்டவர்கள், 36,59,432 பேர் பதினொண்றிலிருந்து பதினாலு வயதிற்கு உட்பட்டவர்கள்.. இவர்களை பள்ளிகளில் சேர்க்க இயலாதவாறு அருகில் பள்ளி இல்லா குடியிருப்பு பகுதிகள் தமிழ் நாட்டில் மட்டும் 364 ஆகும் அதில் 127 பிரைமரி பள்ளிகளும் 234 அப்பர் பிரைமரி எனப்படும் 3 இலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளின் தேவை உள்ளது.

எனவே மாணவர் சேர்க்கைய அதிகரிக்கவும் கல்வியின் தரத்தை உயர்த்திடவும் கீழ்வரும் திட்டங்களை நன்முறையில் அமுல்படுத்தலாம்.

அ. அனைவர்க்கும் இலவச கல்வி
ஆ. பள்ளிய விட்டுச் செல்வோர் எண்ணிக்கை குறைப்போர்க்கு ஊக்க ஊதியம்
இ. ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் அதிகரித்தல்
ஈ. மாணவர்கட்கு நான்கு இணை சீருடை வழங்கல்
உ. இலவச மடிக்கணினி.பள்ளி இறுதி மானவர்கட்கு
ஊ. இலவச காலணிகள் வழங்குதல்
எ. இலவச கல்வி தளைகள் (ஜியோமிதி பெட்டி, பென்சில், பேனா, ஸ்கேல்)
ஏ. இலவச குறிப்பேடுகள் வழங்குதல்
ஐ. இலவச பாடப்புத்தகங்கள் வழங்கல்
ஒ. இலவச உல்லன் ஸ்வெட்டெர் மலைப்பிரதேசங்களில்
ஓ. இலவச மிதிவண்டி.
ஒள. இலவச சத்துணவு
ஃ. இலவச பேருந்து கட்டனம்.
அ.1. அனாதை குழந்தகளுக்கு நிதி உதவி
அ.2. சதுரங்க ஆட்டாம் கற்பித்தல்
அ.3. சிறந்த ஆசிரியர்க்கு பரிசு
அ4. சிறந்த ஆசிரியர்க்கு தேசிய பரிசு.
அ5. பள்ளிகளில் தகவல் தொழில் நுட்பக் கல்வி புகுத்துதல்
அ.6. ஸ்மார்ட் பள்ளி, ஸ்மார்ட் பள்ளியறை.
அ7. ட்ரைமெஸ்டர் அமைப்புப்படி பாடத்திட்டங்கள் சீரமைப்பு
அ.8.தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை
அ9. கணக்கு ஆராய்சிசாலை அமைத்தல்
அ.10 ஆங்கிலம் பேசும் எழுதும் திறன் பயிற்சி
அ.11. வானொலி, காணொளி மூலம் பாடம்.
அ12. ஆசிரியர் தகுதி மேம்பாட்டுப் பயிற்சிகள்
அ13. அனைவர்க்கும் கல்வித்திட்டம்.

வசீலி கெம்லஸ்கியின் “இதயம் தருவோம் குழந்தைகளுக்கு” எனு ரஷ்ய புத்தகத்தில் குறிப்பிடுவதைப் போல செயல்வழிக் கற்றல் முறையில் மாணவர்களில் படைப்பாற்றல் மிளிர்வதையும், கணினிக் கல்வி பெறுவதின் மூலம் பன்னாட்டு கல்வித் தரம் பெறுவதையும் நாம் உறுதி செய்ய இயலும்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (7-Jul-14, 3:20 pm)
பார்வை : 691

மேலே