உழுது பயிரிட்டால் உய்த்திடலாம்
நெஞ்சில் பால்வார்த்திடும் பசுமை
நிலைத்தால் விழிகளுக்கு குளுமை !
உலைகள் கொதிக்க தேவையன்றோ
உயிர்கள் வாழ்ந்திட அவசியமன்றோ !
உழுது பயிரிட்டால் உய்த்திடலாம்
உழவன் வாழ்வும் உயர்ந்திடலாம் !
விளைநிலமே காணாமல் போனது
விளைவால் பலஉயிரும் பறிபோனது !
அறுவடை எனும்சொல்லே மறைந்தது
அறிந்திட்ட தலைமுறையும் அழுகிறது !
விளைந்த இடங்களோ கட்டிடமாகிறது
விதைக்காத மண்ணோ வெற்றிடமானது !
எஞ்சியுள்ள நிலங்களோ நிலைக்கட்டும்
மிச்சமுள்ள விதைகளோ விளையட்டும் !
தலைமுறைகள் தழைத்திட சிந்திப்போம்
தரிசு நிலங்கள் தரமாறிட செய்திடுவோம் !
( தரிசு நிலம் = பயிரிடப்படாத நிலம் )
பழனி குமார்