இதுதான் பக்தியா

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
இன்று நான் பதிவிடப்போவது சற்று சிந்திக்கபடாத அல்லது விவாதத்திற்கு உள்ளாகாத ஒரு விடயம். முன்பெல்லாம் (அதாவது 1960 அல்லது 70களில்) பக்திப் படங்கள் என்றால் புராணங்களில் இருந்தோ, இதிகாசங்களில் இருந்தோ கதைகள் எடுக்கப்பட்டு, அதற்குண்டான திரைக்கதை அமைக்கப்பட்டு உருவாக்கப்படும். பொதுவாக அவைகள் பழைய கதைகளை மையப்படுத்தி இருந்ததனால், எல்லா தரப்பு மக்களும் கண்டுகளிக்குமாறு இருந்தது. மேலும் இவ்வகை படங்கள் கடவுளைப் பற்றிய நம்பிக்கையும், இறை சிந்தனையை வளர்க்கும் மார்கத்தையும் தந்தன. உதாரணமாக 1971இல் வெளிவந்த "ஆதிபராசக்தி" என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சியினைக் கூறலாம். அதில் சுருளிராஜன் ஒரு செம்படவனாக நடித்திருப்பார், அவர் தனக்கு கடவுளை காட்டவேண்டும்படி அந்த ஊரில் உள்ள மிகப்பெரும் முனிவரிடம் (நம்பியாரிடம்) கேட்பார். அதற்கு முனிவரோ மூச்சைப்பிடித்து ஆற்றில் இரு என்று சொல்லி சென்றுவிடுவார், இவரும் அதைப்போலவே மூச்சினைப்பிடித்து ஆற்றுக்குள் விழுந்து விடுவார் பின்னர் கடவுள் வந்து அவரைக்காப்பாற்றுவார் என்றெல்லாம் கதை செல்லும். இந்த காட்சியினை நீங்கள் காணொளித்தளங்களிலும் (youtubeஐ தமிழில் எப்படி சொல்லுவது??!!) காணலாம். இதில் விசேஷம் என்னவென்றால், எந்த வேதம், அப்பியாச ஞானமும் அற்ற ஒரு மீனவனுக்கு கூட கடவுள் அருள்புரிவார் என்னும் கருத்தினை மையப்படுத்துவதே. படித்துவிட்டதால் மட்டும் இறைவனை அறிய முடியாது என்னும் கருத்தினை இங்கு காணலாம். இதைப்போலவே 1967களில் வந்த திருவருட்செல்வர் எனும் திரைப்படத்திலும் ஒரு அழகிய காட்சி (அந்த படம் முழுமையும் கருத்தும் கதையும் போதிந்ததே) ஒரு சிவனடியார் (சிறுகுறிப்புத்தொண்டர்) துணி துவைக்கும் இனத்தினை சார்ந்தவர். ஆனால் தன்னுடைய கடமையினை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டதனால் எவ்வாறு இறைவனை அடைந்தார் எனும் கருத்தினை புகட்டியிருப்பார்கள். அதேபோல அப்படத்தில், "காதலாகி கசிந்து" என்னும் தேவாரப்பாடல் அதன் சுவையும் சொல்வளமும் சிதையாது என்ன அழகாக அதற்கு திரை இசை திலகம் கே. வி. மகாதேவன் அவர்கள் இசை அமைத்திருப்பார் தெரியுமா!!. இன்றளவும் அப்பாடல்களைக் கேட்கக்கேட்க நம்மை மெய்மறக்கச்செய்வன. இசை என்பது ஒரு தாய் போல, பண்ணுக்கும் சிதைவின்றி மொழிக்கும் சிதைவின்றி பிறப்பது தான் தூய இசை. அதே போல, சுந்தரமூர்த்தி நாயனார் பற்றிய காட்சிகள் வரும். என்ன அழகான காட்சியமமைப்பு, அக்காட்சியில் "சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே" என்று ஒரு பாடல் வரும், டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுடைய குரலில் கேட்போரை மெய்மறக்கச்செய்யும் பாடல். கண்ணதாசன் அவர்கள் தேவாரத்திலும், சங்கப்பாடல்களிலும் இருந்த கருத்துக்களை எளிய தமிழ் பாடலாக வடித்திருப்பார். பக்திப்படங்கள் என்றாலே அதற்கென்று ஒரு தனித்தன்மையும் தூய்மையும் இருந்தது. மேலும் பல மூடப்பழக்கங்களையும், சமூக சீர்திருத்த செய்திகளையும் கூட சொல்லியிருப்பார்கள். வசனங்களில் கூட தமிழின் வாசனை இருக்கும். கல்வி, செல்வம், வீரம் எனும் மூன்றும் பகைத்துக்கொண்டால் என்னவாவது என்னும் கற்பனையே சரஸ்வதி சபதம் திரைப்படம். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தின் கதைகளை எல்லோரும் படித்து அறிய முடியாது, அது தமிழ் பாடல்களாக இருக்கும், அதனை ஒரு அழகான தமிழ்ப்படமாக எல்லோரும் பார்த்து ரசிக்கும்வண்ணம் எடுத்திருப்பார்கள். அதிலே ஒரு கட்சி, சிவபெருமான் விறகுவெட்டியாக வரும் காட்சியில் இரவில் ஒரு பாடல் பாடுவார் (பாட்டும் நானே பாவமும் நானே..) அதில் நின்ற பொருள் அசையவும் அசைந்த பொருள் நிற்கவும் சகல உயிர்களும் இறைவனின் பாட்டிற்கு மயங்குவதை காட்டி இருப்பார்கள். அந்த காட்சியினை இந்த திருவிளையாடல் புராணப்பாடலுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.
"தருக்களும் சலியா முந்நீர்ச் சலதியுங் கலியா நீண்ட
பொருப்பிழி யருவிக் காலு நதிகளும் புரண்டு துள்ளாது
அருட்கடல் விளைத்த கீத வின்னிசை யமுத மாந்தி
மருட்கெட அறிவன் றீட்டி வைத்தசித் திரமே யொத்த" - திருவிளையடர் புராணம்
எவ்வளவு ஈடுபாடுடன் அந்தக் காட்சியினை எடுத்திருப்பார்கள் என்பதை அதை பார்த்தவர்களுக்கே புரியும். கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தினை நம் கண்முன் கொண்டுவந்தது "கந்தன் கருணை". அருணகிரிநாதர், பட்டினத்தார், காரைக்கால் அம்மையார் போன்ற எண்ணற்ற அடியவர்களைப் பற்றியும் அன்பர்களைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிந்தது இந்த பழைய திரைக்காவியங்களால் தான். பலபேருக்கு கர்ணனின் சிறப்பினை உணரவைத்ததும், மகாபாரதத்தின் பெருமையினை உணர செய்ததும் இந்த படங்கள் தாம். இன்றைய பிரம்மாண்ட திரை பின்னணி (background) அளவுக்கு அரங்கஅமைப்பு அமைந்திருக்கும். இன்றளவும் அவைகளுக்கு ஈடு அவைகளே. ஆனால் இன்றைய பக்திப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள், பக்தி என்னும் பெயரில் கேலிக்கூத்து தான் நடக்கின்றது. இறை என்பது அனைத்தையும் கடந்த ஒன்று. அது மனத்தைக் கடந்த மறை. நிர்குணா என்கிறது மறை. அதாவது குணங்களுக்கு அப்பாற்பட்டது என்று பொருள். அனால் கடவுளே பழிவாங்க அலைவது போலவும், பல்வேறு மூடப்பழக்கவழக்கங்களுக்கு வழி கோலுவது போலவும், வெறும் தந்திரக் கட்சிகளின் பிண்டமாகவும் இன்றைய படங்கள் இருப்பது வேதனை. அதுவும் குறிப்பாக இந்த அம்மன் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். வில்லனை பழிவாங்குவதை தவிர அம்மனுக்கு வேறு வேலையே கிடையாது. அதுவும் எப்படித்தான் அப்படிப்பட்ட நல்ல கதாநாயகிக்கு எப்போதுமே வில்லன் கணவனாக வருவானோ??!! அது அந்த அம்மனுக்கே வெளிச்சம். கடவுளை பற்றிய தவறான எண்ணங்களை இப்படங்கள் எளிதில் மக்கள் மனதிற்கு எடுத்துச் சென்று விடுகின்றன. இறை என்பது நம்பிக்கை. "உளதென்றுரைக்கின் உளதேயாம், இலதென்றுரைக்கின் இலதேயாம்" என்கிறார் கம்பர். நம் நாடு பல்வேறு நூற்றாண்டுகளாக ஆன்மீகப் பெருமைகள் பொதிந்திருப்பது. இங்கே ஒரு திருடன் கூட தொழிலைத் தொடங்கும் முன் இறைவனை வணங்காது தொடங்கமாட்டான். இங்கே எண்ணற்ற மகான்கள் வாழ்ந்துள்ளனர். தாயுமானவர், வள்ளலார், பாடகச்சேரி ஸ்வாமிகள், ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள் முதல் நேற்று வரை நம்முடன் வாழ்ந்த கிருபானந்த வாரியார் வரை இன்னும் எண்ணற்ற மகான்களையும் ஞானிகளையும் கண்ட நாடு நமது நாடு. அவர்களின் வாழ்க்கையினை படமாக்கினால் அது வளரும் தலைமுறைக்கு நம்பிக்கையினையும் தெளிவினையும் கொடுக்கும். நம்முடைய இளைய தலைமுறையினருக்கு நல்ல மகான்களின் வாழ்க்கையினைப் பற்றியும், நமது பழம்பெரும் வரலாற்றினையும் கூறுவோம். பக்திப்படங்கள் எனும் பெயரில் செய்யும் அவலங்களை தவிர்ப்போம். பக்தி என்பது கிராபிக்ஸ் அல்ல. கடவுள் என்பவர் திரையில் மின்னல் போல தோன்றுபவர் அல்ல. அவர் நமக்கு உள் இருப்பவர். நம்மை மனிதனாக வழி நடத்துபவர். ஆன்மிகம் என்பது பூஜையோ, பஜனையோ, சடங்குகளோ அல்ல. அது நமது ஆன்ம எழுச்சியினை தூண்டும் ஒரு முயற்சி. ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு வழிமுறையும் அந்த எழுச்சிக்காக தோன்றியவைகளே. நன்றி!!! - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (8-Jul-14, 5:42 pm)
பார்வை : 354

சிறந்த கட்டுரைகள்

மேலே