நீ அவிழ்த்த நினைவு முடிச்சுகள்-------அஹமது அலி--------

நினைவின் முடிச்சுகளை
நேற்றவிழ்த்து ஏதேதோ
ஞாபகங்களை அசை போட்டாய்.....


காலமெனும் மருந்து
நினைவை மறக்கடிக்கையில்
நினைவு மீட்டலில்
நீ கூட்டல் விதி புரிந்தாய்.....


நீட்டோலை வாசிக்காது
குற்றோலையில் சட்டென
குறுந்தகவல் குயிலாய் கூவினாய்...


தன்னிலையும்
உன்னிலையும்
மறந்த வேளையில்
உன் தகவல்
அந்நிலை மாற்றி
அன்புச் சரம் வீசியதே.....


நினைந்துருகும்
உன் தவிப்புகளை
குறிப்பால் உணர்த்தி
குறி பார்த்து எனைச் சாய்த்ததே...


நட்பு நதியொன்றில்
படகை வலித்த போது
காதல் பிரவாகம்
வாரிச் சுருட்டியதே...


நீட்டிய கரங்களுக்குள்
ஈட்டியாய் பாய்ந்த அன்பு
காதல் சுரப்பிகளை
கண்டபடி உடைத்ததே....


மோகத் தவமிருந்து
தேகம் மெலிந்திட
இரவும் பகலும் நம்மோடிணைந்து
நாட்களை மறந்ததே....


ஒற்றை முடிச்சை அவிழ்த்து
கற்றை நினைவில் புகுந்து
காதல் உலகம் மீட்டாய்.....


மொத்த முடிச்சும் அவிழ்த்து
நினைவில் புகுந்திட நினையாதே
நம் காதல் பேரலை வானுயரும்
மூச்சு தாங்கிட உன்னால் ஆகுமோ...

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (10-Jul-14, 8:50 am)
பார்வை : 220

மேலே