ஆடல் நங்கை கீர்த்திக்கு வாழ்த்துக்கள்

ஆடல் நங்கை கீர்த்திக்கு வாழ்த்துக்கள்
======================================

ஆய கலைகளிலே அருமையான கலை
ஆடற்கலை பயின்று ஆடிடுவாய் பாவாய்
அபினயம் உன்னவயம் தழுவிட காண்போர்
கிறங்கியே நின் திறமையில் சாய்வார்!!!

வெட்கமொடு வீரமும் கோபமொடு சாந்தம்
நவரசம் யாவையும் கனி ரசமென ஊட்டுவாய்
பாவிடும் பரதமும் பார்வைக்கு விருந்தாய்
காவியம் படைத்தே விருதுகளை ஏற்பாய்!!!

நின் பாதம் சதங்கைகள் இந்நேரம் காணும்
வாய் மொழி யாவையும் சதங்கைகள் பேசும்
அரங்கேற்ற வேளையிது தாவட்டும் பாதம்
திக்கெட்டும் பேசட்டும் நீயாடும் பரதம்!!!

பாவமொடு ராகமொடு தாளமொடு சேர்த்து
ஸ்ருதியொடு கலக்கவே நாளும் நீயாடு
ஊருலகம் நின் திறன் கண்டுமே வியக்க
கீர்த்தியே வாழ்ந்திடு நீ கீர்த்தியோடு!!!

விழியொடு செவிக்கென விருந்தளிக்கும் வித்தை
நீயாடிட காண்போர்க்கு மயங்கிடும் சிந்தை
பயின்றகலை பறைசாற்றும் இனிய நன்னாளில்
ஆனந்தக் கூத்தனவன் ஆசிகள்... ஆசிகள்... !!!

வாழ்த்துக்களுடன்,
சொ. சாந்தி

(எங்கள் கிளை அலுவலக மேலாளர் திருமதி சித்ரா செண்பக வள்ளி அவர்களின் மகள் கீர்த்திக்கு நாட்டிய அரங்கேற்றம் நடைபெறவிருக்கிறது. அவர்களுக்கு நான் எழுதி கொடுத்த வாழ்த்து. இங்கேயும் உங்களிடத்தில் பகிர்வதில் மகிழ்ச்சி.)

எழுதியவர் : சொ. சாந்தி (10-Jul-14, 9:13 pm)
பார்வை : 3533

மேலே