கால் பந்தின் பெருமிதம்
ஓரு சிலர் வெற்றிக்கோப்பை ஏந்த
சில ரசிகர்களின் சந்தோசத்திற்காக
நாலு வருடத்திற்கு ஒருமுறை
உலககோப்பை என்ற பெயரில்
நான் உதைபடுகிறேன்
நான் சுயநலமானவன்
உள்ளிருக்கும் காற்றை
எவருக்கும் பகிராமல்
சொந்தம் கொண்டாடுவதால்
என்னை உதைக்கிறார்கள்
இரு பதினொன்று பேர் எனை உதைக்க
இரு கொம்புக்குள் உள்ள வலையில்
என்னை வலுக்கட்டாயமாக திணிக்க
நாடு திரண்டு போராட்டம்
உலகமக்களின் கைதட்டலுடன்
நடுவருக்கு கூட என் மேல் கரிசனம் இல்லை
என்னை காலில் உதைத்தால், சரி என்கிறார்.
ஐயோ! உதைபடுகின்றாயே
என்று என்னை கையில் ஏந்தினால், தவறு என்கிறார்
கட்டம் கட்டி எனை உதைக்கின்றனர்
தலையில் முட்டி வதைக்கின்றனர்
ஆடும்போது நான் அனைவரின் கண்பார்வையில்
ஆட்டம் முடிந்தபிறகோ நான் மூலையில்
நான் உலகத்தின் முக்கிய ரவுடியா?
எனை உதைப்பதற்கு
பலநாடுகளிலிருந்து வீரர்கள்
என்னகொடுமையடா, இது
நான் உதைபடுவதை காண
உலகத்தில் எத்தனை ரசிகர்கள்
நான் உதைபடுவதில் எனக்கு பெருமிதம்தான்
ஏனென்றால், ஆட்டம் முடிந்தபிறகு
வெவ்வேறு நாட்டினர், பகை உணர்வில்லாமல்
நட்புணர்வாக, அணைத்து கொள்கின்றனர், ஒருவரையொருவர்
இதற்காக எந்நாளும் உதைபடகாத்திருக்கிறேன்