வேற்றொலி வெண்டுறை

ஈரடி பேதித்து இசையும்நா லடிப்பா
வேற்றொலி யாமென விளம்பினர் சிலரே.

முதல் இரண்டடிகளும், அடுத்த இரண்டு அடிகளும்
ஒரே யாப்பால் அமையாது வேறுபட்டுள்ள நான்கு அடிகளை
உடைய பாவினம் வேற்றொலி வெண்டுறை எனப்படும்.

வேற்றொலி வெண்டுறை நாலடிப்பாவாகத்தான் இருக்க வேண்டும்
என்ற விதி பிற இலக்கண நூல்களுள் கூறப்படவில்லை.

மூன்றடியிலிருந்து ஏழடி வரையிலும் அடிகள் வரலாம்.

‘மூன்றடி முதலா ஏழடி காறும் வந்த
ஈற்றடி சிலசில சீர்குன்றினும்
அவை வேற்றொலி விரவினும்
வெண்டுறை என்பது தான் இதன் இலக்கணம்.

எடுத்துக்காட்டு:

சற்குருவா மவர்பலரிற் றலைமைபெறு பழனிமலைத் தண்ட பாணி
நிற்குநிலை யுணர்ந்தவன்றன் எழுத்தாறுஞ் சந்ததமும் நிகழ்த்த வல்லார்
கற்கும்நா வலர்பெருங் கருணை மாதவர்
விற்குனித் தமர்செயும் விறற்கை வீரரே.

இஃது நான்கடியாய், ஈற்றடி இரண்டும் சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை.

‘கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தாற் கருமம் யாதாம்?
இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே ஏமுற்றால் இயைவ தென்னாம்?
பொல்லாதார் நன்கலன்கள் மெய்புதையப் பூண்டாலும் பொலிவ தென்னாம்?

புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே?
அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ?’

இஃது ஐந்தடியாய், ஈற்றடி இரண்டும் சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை.

‘முழங்கு களியானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்

செழுந்தண்பூம் பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய
எழுந்தசே திகத்துள் இருந்தவண் ணல்லடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ’.

இது ஆறடியாய், முதலடி இரண்டும் அறுசீராய், பின் நான்கடியும் நாற்சீராய்,
முதலிரண்டடியும் ஓர் இசையாய், பின் நான்கடியும் மற்றோர் இசையாய்
வந்தமையால், வேற்றொலி வெண்டுறை எனப்படும்.

‘முழங்குதிரைக் கொற்கை வேந்தன் முழுதுலகும் ஏவல்செய முறைசெய்கோமான்
வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் றாக்கரிய வைவேல் பாடிக்

கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்
இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந்
தலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்
புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்
விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே’.

இது ஏழடியாய், முதலிரண்டடியும் அறுசீராய், ஓரோசையால் வந்து,
பின் ஐந்தடியும் நாற்சீராய், வேறோர் ஓசையால் வந்த வேற்றொலி வெண்டுறை.

எழுதியவர் : (19-Jul-14, 10:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 90

சிறந்த கட்டுரைகள்

மேலே